‘பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை நிர்வகித்த’... ‘சென்னை இளம்பெண்’... யார் இவர்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 08, 2020 08:16 PM

சர்வதேச மகளிர் தினமான இன்று பிரதமர் மோடியின் சமூக வலைதளப் பக்கங்களை, இந்தியா முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு சாதனைப் பெண்கள் காலை முதல் நிர்வகித்து வருகிறார்கள். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த சினேகா மோகன்தாஸ் என்ற இளம் பெண்ணும் ஒருவர். இவர் என்ன செய்து வருகிறார் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Sneha Mohandoss who took over PM Modi\'s Twitter Account

சென்னையில் பிறந்து வளர்ந்து விஸ்காம் படித்துவிட்டு, பின்னர் சமூகப் பணிகளில் பட்ட மேற்படிப்பு படித்துள்ளார் இந்த இளம்பெண் சினேகா மோகன்தாஸ். ஃபுட் பேங்க் இந்தியா (உணவு வங்கி) என்ற அறக்கட்டளையின் நிறுவனராக உள்ள சினேகா மோகன்தாஸ், `தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்’ என்ற பாரதியாரின் வரிகளை ஏற்று ஆதரவற்றவர்கள், சாலையோரங்களில் தஞ்சமடைந்தவர்கள், வீடுகள் இல்லாமல் இருப்பவர்கள் என அனைவருக்கும் தினமும் தேடிச் சென்று சுட சுட உணவளித்து வருகிறார்.

முதலில் சினேகா மோகன்தாஸ் தன்னை பற்றிய அறிமுக வீடியோவுடன் கருத்துகளை மோடியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடத் தொடங்கினார். அந்த வீடியோவில், `நான் 2015-ம் ஆண்டு முதல் இந்த அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறேன். சென்னையில் வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பு இருந்து இதைச் செய்து வருகிறேன். பசியை எதிர்த்துச் சண்டையிட வேண்டும் பட்டினியில்லா இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். என் தாத்தாவின் பிறந்தநாள் அன்று சில குழந்தைகள் நலக் காப்பகத்துக்குச் சென்று உணவு வழங்கினேன். அப்படித்தான் இது தொடங்கியது.

பின்னர் இதை ஃபேஸ்புக் பக்கமாகத் தொடங்கி அதன் மூலம் சில இளைஞர்களை என்னுடன் இணைத்துக்கொண்டேன். தற்போது அவர்களும் என்னைப்போலவே இந்தியாவின் பல மாநிலங்களில் ஏழைகளுக்கு உணவு வழங்கி வருகிறார்கள். எங்களுக்கு உதவி செய்ய விரும்புபவர்களிடமிருந்து பணமாகப் பெறாமல் பொருள்களாகப் பெற்று நாங்களே சமைத்து அனைவருக்கும் வழங்கி வருகிறோம். சமைப்பதற்காக சில தன்னார்வலர்கள் எங்களுக்கு உதவி செய்கிறார்கள். மேலும், அவர்களே உணவுகளை ஏழைகளின் இடங்களுக்குக் கொண்டு செல்லவும் உதவுகிறார்கள். அவர்களால்தான் இந்த அமைப்பு தற்போது பெரிதாகியுள்ளது.

`வெற்றியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்’ இதுதான் என் வெற்றியின் மந்திரம்’ என்று பேசி முடித்துள்ளார் சினேகா மோகன் தாஸ். எங்கள் வீட்டில் ஏதேனும் விஷேசம் நடந்தால் என் அம்மா, ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் நிறைய மக்களை வீட்டுக்கு அழைத்து அவர்களுக்கு உணவு வழங்குவார். என் சிறுவயதிலிருந்து இதைப் பார்த்து வளர்ந்ததால், இந்தச் செயலை பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என நினைத்து இதனை தொடங்கினேன் என்றும் சினேகா மோகன்தாஸ் கூறியுள்ளார். ஒவ்வொருவர் உண்ணும் அரிசியிலும் அவர்களின் பெயர் எழுதப்பட்டிருக்கும் எனக் கூறுவார்கள். அந்த உணவை வீணாக்காமல், உங்களுக்கு அதிகப்படியான உணவு கிடைத்தால் அதை இல்லாதவர்களுக்கு அளித்து உதவுங்கள் என்ற சிறந்த கருத்துடன் முடித்தார் சினேகா மோகன் தாஸ். இந்த இளம்பெண் சினேகா மோகன்தாஸின் பணி மேலும் பெரிய அளவில் வெற்றி பெற நாமும் வாழ்த்துகளைத் தெரிவிப்போம்.

Tags : #TWITTER #NARENDRAMODI #TNFLOOD #SNEHA MOHANDOSS