'எடம்'லாம் தர முடியாது..தலைக்கேறிய ஆத்திரம்..விரலைக் கடித்து துப்பிய நபர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Sep 25, 2019 01:53 PM

மும்பை,சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பெரும்பான்மையான மக்கள் போக்குவரத்துக்கு மின்சார ட்ரெயின்களையே பயன்படுத்துகின்றனர்.இதனால் ட்ரெயின்களில் பெரும்பாலான நேரங்களில் கடும் நெரிசலும் ஏற்படுவதுண்டு. அப்போது பயணிகளுக்கு மத்தியில் சிறுசிறு வாக்குவாதங்கள்,சண்டைகள் நிகழ்வதுண்டு.

Man Chews Of Finger Co-Passenger in Mumbai Local Train

அந்த வகையில் மும்பை லோக்கல் ட்ரெயினில் ஏற்பட்ட சிறு சண்டையில்,சக பயணியின் விரலை இளைஞர் ஒருவர் கடித்துத் துண்டாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மும்பை கன்சோலி பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் பாண்டுரங் தூம்ப்ரே.இவர் கடந்த வாரம் மும்பையில் உள்ள தாதர் ரெயில் நிலையத்தில் மின்சார ட்ரெயினில் பயணம் செய்தார்.கூட்டம் அதிகமாக இருந்ததால் படியில் தொங்கிக்கொண்டு மகேஷ் பயணம் செய்துள்ளார்.

ட்ரெயின் குர்லா ஸ்டேஷனை அடைந்ததும் மகேஷ் இருந்த பகுதியில் ஆஷிக் யூசுப் ஷேக் என்பவரும் ஏற முயற்சி செய்துள்ளார்.ஏற்கனவே தொங்கிக்கொண்டு இருந்த மகேஷ்,ஆஷிக்கை ஏற விடாமல் தடுக்க,இதில் கோபமடைந்த ஆஷிக்,மகேஷின் ஆட்காட்டி விரலை கடித்துத் துண்டாக்கி விட்டார்.இதில் மகேஷின் விரலில் ரத்தம் வழிய,சக பயணிகள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த ரெயில்வே போலீசார் மகேஷை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து ஆஷிக்கின் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து,கைது செய்தனர். மருத்துவமனையில் மகேஷை பரிசோதித்த டாக்டர்கள் அவரின் கைவிரலை மீண்டும் ஒட்டவைக்க முடியாது என்று கூறிவிட்டனர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : #MUMBAI #TRAIN