'நம்ம பாண்டி பஜாரா இது'...'இனிமேல் கார்'ல போக முடியாது'...'இதெல்லாம் யாராவது கவனிச்சீங்களா'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Sep 25, 2019 01:44 PM
சென்னை மக்களின் மனதை விட்டு பிரிக்க முடியாத இரண்டு இடங்கள் என்றால் அது, மெரினா பீச்சும், தி.நகரும் தான். அதிலும் குறிப்பாக பொங்கல், தீபாவளி என்றால் மக்கள் வெள்ளத்தால் தி.நகர் திக்குமுக்காடி போகும். இதனிடையே தி. நகரில் பெண்களுக்கு மிகவும் பிடித்த இடமாக இருப்பது தான் பாண்டி பஜார்.
சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது பாண்டி பஜார். இங்கு வீட்டிற்கு தேவையான எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், பூங்கொத்துகள் என அனைத்தும் இங்கு வாங்க முடியும். மரங்கள் சூழ்ந்த இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு கொஞ்சமும் பஞ்சம் இருக்காது. ஆனால் அதற்கெல்லாம் தற்போது மொத்தமாக தீர்வு வர போகிறது. அதற்கு முக்கிய கரணம் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம்.
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அது மாநில அரசிடம் வழங்கப்படுகிறது. அதன் பின்னர் அந்த நிதி மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த நிதியானது, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையிலான இயக்குநர்கள் குழு மூலம் சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் என்ற நிறுவனம் அமைக்கப்பட்டு அதற்கான வளர்ச்சி பணிகளுக்கு செலவிடப்படுகிறது.
தற்போது அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், பாண்டி பஜாரில் முக்கிய பிரச்சனையாக கருதப்படுவது போக்குவரத்து நெரிசல் தான். அதற்கு தீர்வு காணும் வகையில், பஜார் முடியும் சாலை சந்திப்பில் பிரம்மாண்டமாக 4 அடுக்கு கொண்ட வாகன பார்க்கிங் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இது போக்குவரத்து மற்றும் பார்க்கிங் பிரச்னைக்கு முக்கிய தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே பிளாட்பாரங்கள் தற்போது பெரிய மால்களின் பார்க்கிங்கில் போடப்பட்டிருக்கும் சதுரக் கற்களால் அமைக்கப்பட்டுள்ளன. இனிமேல் இந்த பிளாட்பாரத்தில் யாரும் காரை கொண்டு நிறுத்த முடியாது. அதே நேரத்தில் பைக்கில் பிளாட்பாரத்தில் செல்லவும் முடியாது. சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே நடந்த மக்களுக்கு இது நிச்சயம் நிம்மதியை கொடுக்கும். மேலும் சாலையில் ஆங்காங்கே அழகான வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இது பஜாருக்கு புது பொலிவை கொடுத்துள்ளது.
அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் பழைய தெரு விளக்குகள் மாற்றப்பட்டு வளைவான டிசைன் கொண்ட அழகிய விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு விளக்கு கம்பங்களுக்கு ஒன்று என்ற முறையில் சாலை முழுவதும், சிசிடிவி கேமரா வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பஜாருக்குள் சைக்கிளில் செல்ல வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஸ்மார்ட் சைக்களில்கள் தயாராக உள்ளன. மேலும் பேருந்து நிலையங்களின் மேற்பலகைகள் திரையுடன் காட்சி அளிப்பது இன்னும் மெருகேற்றியுள்ளது.
இதனிடையே இதுதொடர்பாக பேசிய மாநகராட்சி அதிகாரிகள், '' பார்க்கிங் கட்டடம் கட்டி முடித்த பின்னர் பஜாருக்குள் எந்த வண்டியும் அனுமதிக்க வேண்டாம் என்ற திட்டம் இருப்பதாக கூறியுள்ளார்கள். பஜார் சாலைக்கு நடந்து அல்லது ஸ்மார்ட் சைக்கிள் மூலம் மட்டுமே செல்ல முடியும். சாலையின் இரு பிளாட்பாரங்களிலும் குடைகளை வைத்து இருக்கைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது'' என கூறினார்கள்.
மாநகராட்சியின் அனைத்து பணிகளும் முடிந்த பின்னர் பாண்டி பஜார் நிச்சயம் மினி ஃபாரினாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு மாறும் பட்சத்தில் சென்னை மக்கள் 'இது நம்ம பாண்டி பஜாரா'' என்ற கேள்வி அவர்களுக்கு எழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றே சொல்லலாம்.