'ஸ்டூடண்ட்ஸ்' தான் முக்கியம்... 1 முதல் 6-ம் வகுப்புகள் வரை 'தேர்வுகள்' ரத்து... அதிரடி அறிவிப்பை 'வெளியிட்ட' அரசு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Mar 13, 2020 12:28 PM

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் சூழ்நிலையில், கர்நாடக அரசு 6-ம் வகுப்பு வரை தேர்வினை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

Karnataka Government cancelled exams up to 6th standard

இந்தியாவில் இதுவரை 70-க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். மேலும் கர்நாடகாவை சேர்ந்த 76 வயது முதியவர் ஒருவர் சமீபத்தில் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார். இதுகுறித்து கர்நாடக அரசுத்தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் நேற்று வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் 1-ம் வகுப்பு தொடங்கி 6-ம் வகுப்பு வரையில் மாணவர்களுக்கு தேர்வுகள் கிடையாது என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மாநிலத்தின் கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், '' பெங்களூர் வடக்கு-தெற்கு, பெங்களூர் நகரம், பெங்களூர் புறநகர் ஆகிய கல்வி மாவட்டங்களில் 1 முதல் 6-ம் வகுப்பு வரையில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்பு நடைபெற்ற பருவத்தேர்வுகளை அடிப்படையாக வைத்து அவர்களின் தேர்ச்சி முடிவு செய்யப்படும். இந்த முடிவு, பெங்களூரில் உள்ள 4 கல்வி மாவட்டங்களை தவிர கர்நாடகத்தின் பிற பகுதிகளுக்கு பொருந்தாது.

அதேபோல 7 முதல் 9-ம் வகுப்பு வரையில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் விடுமுறை விடப்படுகிறது. தேர்வு நாளில் மட்டும் அவர்கள் பள்ளிக்கு வந்தால் போதும். வருகிற 23-ந் தேதிக்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க வேண்டும் என்று அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள கால அட்டவணைப்படி நடைபெறும். அதில் எந்த மாற்றமும் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.