அவருக்கு 'உதவுவது' போல நடித்து.. பெண் மருத்துவர் 'கொலை'யில்.. புதிய திருப்பம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Nov 29, 2019 04:54 PM
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில் உள்ள நரசையா பள்ளியை சேர்ந்தவர் பிரியங்கா(26). கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்த பிரியங்கா 2 நாட்களுக்கு முன் வெளியில் சென்று மீண்டும் வீடு திரும்பவில்லை. கடைசியாக அவரது தங்கை பவ்யாவுக்கு கால் செய்த பிரியங்கா மொபட் பஞ்சர் ஆகிவிட்டதாகவும், அப்பகுதியில் லாரி டிரைவர்கள் தவிர வேறு யாரும் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

பதிலுக்கு அவரது தங்கை ஆள்நடமாட்டம் உள்ள பகுதிக்கு செல்லுமாறு பிரியங்காவுக்கு அறிவுரை கூறியுள்ளார். சற்று நேரத்தில் மீண்டும் பேசுகிறேன் என கூறிய பிரியங்கா மீண்டும் அழைக்கவில்லை. இதனால் பயந்துபோன அவரது தங்கை மீண்டும் கால் செய்ய அவரது நம்பர் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. தொடர்ந்து அருகில் உள்ள மாதாப்பூர் காவல் நிலையத்தில் பிரியங்கா குடும்பத்தினர் புகார் செய்தனர்.
காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தேடியும் பிரியங்காவை கண்டறிய முடியவில்லை. இந்தநிலையில் நேற்று காலை எரிந்த நிலையில் பெண் சடலம் ஒன்று பாலத்துக்கு அடியில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பிரியங்கா குடும்பத்தினரை அழைத்து சென்று போலீசார் காட்ட, கழுத்தில் இருந்த விநாயகர் லாக்கெட்டை வைத்து அது பிரியங்கா தான் என்பதை அவர்கள் உறுதி செய்தனர்.
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள், பிரியங்கா போனில் கடைசியாக பேசியதை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் சந்தேகத்துக்கு இடமான லாரி ஓட்டுநர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது பிரியங்காவை லாரி டிரைவர், கிளீனர் உட்பட நான்கு பேர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்றதை ஒப்புக்கொண்டனர்.
இதுகுறித்து முதன்மை குற்றவாளியான நாராயண பேட்டையை சேர்ந்த முகம்மது பாஷா,'' நாங்கள் நான்கு பேர் சேர்ந்து பிரியங்காவுக்கு உதவுவது போல் நடித்தோம். பின்னர் அவரை மறைவான இடத்திற்கு தூக்கி சென்று கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தோம். தொடர்ந்து அவர் அணிந்திருந்த துப்பட்டாவை கழுத்தில் போட்டு இறுக்கி அவரை கொலை செய்தோம்.
இது வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக பிரியங்கவின் உடலை லாரியில் போட்டு மேம்பாலம் வரை எடுத்துச்சென்று கீழே இறக்கி மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டோம்,'' என்று கூறினார். டிரைவர் முகமது பாஷா அளித்த தகவல்கள் அடிப்படையில் நான்கு பேரையும் கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பிரியங்கா மரணம் சமூக வலைதளங்களில் மிகுந்த கொந்தளிப்பை உண்டாக்கி உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்று குறையும்?, எங்களை மன்னித்து விடு சிஸ்டர் என்று நெட்டிசன்கள் பிரியங்கா மரணம் குறித்து பதிவிட்டு வருகின்றனர்.
