'கல்யாணம் பண்றேன்'னு சொன்னான்'...'நம்பி போன பொண்ணு'...காஞ்சிபுரத்தை அதிரவைத்த 'கர்ப்பிணி' மரணம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Nov 29, 2019 03:35 PM

திருமணம் செய்து கொள்வதாக அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணி பெண் உடல் முழுவதும் சிகரெட் சூடு காயங்களுடன், மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pregnant Woman Murdered Under Mysterious Circumstances in Kancheepuram

காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்த ஆண்டி சிறுவள்ளூர் என்ற கிராமத்தைச் சேர்ந்வர் ரோஜா. ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவருக்கும் காரை கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் காதல் மலர்ந்த நிலையில், இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளார்கள். ஒரு கட்டடத்தில் இருவருக்கும் நெருக்கம் அதிகமான நிலையில், அதன் காரணமாக ரோஜா கர்பமடைந்துள்ளார். இதனால் ராஜேஷிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி ரோஜா வற்புறுத்தியுள்ளார்.

இதையடுத்து திருமணத்திற்கு சம்மதித்த ராஜேஷ், காதலி ரோஜாவைத் தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கிறார். இந்நிலையில், காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று கிடப்பதாகக் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்துக்குத் தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது  மரத்தில் தூக்கில் தொங்கியபடி இறந்த பெண் ரோஜா என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் ரோஜாவின் உடலின் பல பாகங்களில் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ரோஜாவின் உறவினர்கள், ரோஜாவின் காதலன் ராஜேஷ் மற்றும் இதில் தொடர்புடையவர்களை உடனடியாகக் கைது செய்து வேண்டும் எனக் கூறி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பேசிய ரோஜாவின் உறவினர்கள் சிலர், '' ரோஜா பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். அவரை காதலித்த ராஜேஷ் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் ரோஜாவை காதலித்து கர்ப்பமாக்கி இறுதியில் கொடுமைபடுத்தி கொலை செய்துவிட்டார்'', என கொந்தளித்தனர். 

பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள ரோஜாவின் மரணம் தொடர்பாக, கொலை வழக்கு பதிவு செய்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காதலன் ராஜேஷைக் கைது செய்தனர். இதனிடையே கைது செய்யப்பட்ட ராஜேஷ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும், அது தெரிந்தும் ரோஜா அவரை காதலித்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி ரோஜா வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே  பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் விசாரணை முழுமையாக முடிந்த பிறகே ரோஜாவின் மரணம் தொடர்பான உறுதியான காரணம் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #MURDER #KANCHEEPURAM #PREGNANT WOMAN #MYSTERIOUS