டெய்லியும் ஆட்டோவுல... ஸ்கூல் போறப்ப பயமா இருக்கு... ஹைகோர்ட் நீதிபதிக்கு... கடிதம் எழுதிய 3-ம் வகுப்பு சிறுவன்... !

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Dec 23, 2019 05:38 PM

கேரளாவில், ஜட்ஜ் அங்கிள் என்று குறிப்பிட்டு, 3- வகுப்பு படித்து வரும் மாணவனின் வேண்டுகோள் நிறைந்த கடிதத்துக்கு, 3 நாட்களில் உயர்நீதிமன்ற நீதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

class 3 boy student aarav wrote a letter to judge uncle

கேரளா மாநிலம் எர்ணாகுளத்துக்கு அருகிலுள்ள பல்லுர்தி - கும்பளாங்கி சாலையில் அமைந்துள்ளது ஆரவ் எனும் சிறுவனின் வீடு. அங்குள்ள பள்ளி ஒன்றில் 3-வகுப்பு படித்து வரும் இந்தச் சிறுவன், தினமும் ஆட்டோவில் , பள்ளிக்கு சென்று வருகிறான். சிறுவனின் வீட்டுக்கு அருகில் உள்ள சாலைகள் பள்ளங்கள் நிறைந்து காணப்பட்டது. இதனால், இரவில் தூங்கும்போது, சிறுவனின் வீட்டை கனரக வாகனங்கள் கடந்து சென்றால், அதனால் அதிர்வு ஏற்பட்டு வந்தது. மேலும், பள்ளிக்கு செல்லும்போது பள்ளங்களால் ஆட்டோ குலுங்கி, குலுங்கி சென்றுள்ளது. இதனால் எங்கே பள்ளத்தில் விழுந்து விடுவோமோ என்ற அச்சத்திலேயே சிறுவன் சென்று வந்துள்ளான்.

இதுகுறித்து பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், சமீபத்தில், `நீதிபதி ஒருவர் சாலையை சீரமைக்க முடியாமல் போனதற்கு மன்னிப்புக் கோரியுள்ளார்’ என்ற செய்தியைப் படித்துள்ளான் சிறுவன் ஆரவ். உடனே தனது அப்பா மகேஷ் காமத்திடம், அந்த நீதிபதி குறித்து கேட்டறிந்தவன், அவருக்குக் கடிதம் ஒன்றை எழுதி, தன் அம்மா பிரீத்தா காமத்தின் உதவியுடன் அனுப்பியுள்ளான். அதில், `அதிகமாக பள்ளங்கள் உள்ள சாலையில் ஆட்டோவில் பயணம் செய்யவே பயமாக இருக்கிறது. ஒவ்வொருமுறை பள்ளங்களில் ஆட்டோ விழும்போதும் தலைகீழாக கவிழ்ந்து விடுவதுபோல் உள்ளது.

இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன் ஜட்ஜ் அங்கிள்' எனக் குறிப்பிட்டுள்ளார். ஆரவ்வின் அம்மா செவ்வாய்க்கிழமை இந்தக் கடிதத்தை நீதிபதிக்கு அனுப்பியுள்ளார். வெள்ளிக்கிழமைக்குள், சிறுவன் ஆரவ் இருந்த சாலைகள் அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. சமூகத்தின் மேல் அக்கறையோடு இருக்கும் ஆரவ் இதுமாதிரியான செயல்பாடுகளில் ஈடுபடுவது முதன்முறையல்ல.

இதற்கு முன்பு, தீவின் சாலை அருகே குவிந்துகிடந்த குப்பைகளை தன்னுடைய அப்பாவின் ஃபோனில் புகைப்படம் எடுத்து பிரதமரின் செயலிக்கு அனுப்பியுள்ளான். இதேபோல், சாலைகளில் புகைப் பிடித்துக் கொண்டிருக்கும் நபர்களைப் பார்த்தால் சாதாரணமாக கடந்து செல்லாமல், அவர்களுக்கு எதிராக  அவன் புகார் தெரிவிக்கவும் தயங்குவதில்லை. தன்னுடைய பாட்டியின் உதவியுடன் ஆரவ் இந்த மாதிரியான சமூக செயல்பாடுகளில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், கடிதம் மூலம் பள்ளங்களை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதால், சிறுவன் ஆரவ் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறான்.

Tags : #BOY #KERALA