'கார் விழுந்துருக்கு'.. பணமும் வாங்கிக்கலாம்'.. 'ஆசையை' தூண்டும் 'வாய்ஸ்'.. அதுக்கப்புறம் போட்ட கண்டிஷன்!.. 'கரூர்' இளைஞருக்கு வந்த போன்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Dec 23, 2019 05:31 PM

பொறியியல் படித்துவிட்டு, சுய தொழில் செய்து வருபவர் கரூர் மாவட்ட இளைஞர் ஜெய்சுந்தர்.  மக்கள் பாதை அமைப்பின் கரூர் நகர ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வரும் ஜெய்சுந்தருக்கு, தனியார் ஆன்லைன் ஷாப்பிங் கம்பெனியில் குலுக்கல் முறையில் ஒரு XUV500 ரக கார் விழுந்திருப்பதாகக் கூறி, ஒரு பெண் போன் செய்துள்ளார். 

Karur Youth Deals with Cheating Call came from Hosur

12 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பண மதிப்புள்ள அந்த காரை அதை பணமாகவோ அல்லது காராகவோ வாங்கிக் கொள்ளலாம் என்று அந்த அழகிய பெண் குரல் கூறியுள்ளது.  கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்த பெண் வீசிய வலையில் சிக்கக் கூடாது என்று உஷாராக அணுகிய ஜெய்சுந்தர், அந்த பெண் தன் பெயர் தீபிகா என அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும், ஆனால் அந்த காரை பெறுவதற்கு 13 ஆயிரத்து 800 ரூபாய் வரியாக கட்ட வேண்டும் என்று பேசியதாகவும் ஜெய்சுந்தர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரிப்பணத்தை செலுத்துவதற்கு ஒரு அக்கவுண்ட் நம்பர் அனுப்புவதாகவும், அந்த அக்கவுண்ட் நம்பருக்கு பணத்தை அனுப்பினால், காராகவோ பணமாகவோ குலுக்கல் பரிசு வந்து சேரும் என்று அந்த பெண் கூறியதை கேட்டு முதலில் ஆசை வந்ததாகவும் ஜெய்சுந்தர் உண்மையைச் சொல்கிறார். மேலும் இதுபற்றிய சில விபரங்களை வாட்ஸ்-ஆப்பில் அனுப்பி வைப்பதாகவும் அந்த பெண் கூறியிருக்கிறார். அதன்படி பிரபல ஆன்லைன் நிறுவனத்தின் பேரால் இந்த குலுக்கல் பரிசு தரப்படுவதாக ஒரு பரிசுச் சான்றிதழின் போட்டோ ஜெய்சுந்தரின் வாட்ஸ்-ஆப்புக்கு வந்தது.

அந்த நிறுவனத்தின் தரப்புக்கு போன் செய்து விசாரித்த ஜெய்சுந்தருக்கு, அவர்களோ,  ‘நாங்க இப்படி ஒரு டீலை கொடுக்கவில்லை. இது மோசடி போன் கால். நம்ப வேண்டாம்’ என்று கூறியுள்ளனர். இந்த கணம்தான் ஜெய்சுந்தர் உஷாராகிறார். உடனே மீண்டும் தனக்கு வந்த நம்பருக்கு திரும்பவும் போன் செய்து அந்த பெண்ணிடம்,  ‘நீங்க யாரு? எங்கிருந்து பேசுறீங்க’ என்று கூறுகிறார்.  அந்த பெண்ணோ,  ‘நான் ஒரிசா பார்டரில் இருக்கும் தமிழ்ப்பிரிவு ஊழியர்’ என்று சொல்ல, ‘சம்மந்தப்பட்ட நிறுவனம் அப்படி ஒரு ஆஃபரையே தரவில்லையாமே?’ என்று ஜெய்சுந்தர் கேட்க, அதற்கு மீண்டும் அப்பெண்,  ‘நாங்க பரிசுப் பிரிவில் இருந்து பேசுறோம் சார். விற்பனை பிரிவில் இருக்குறவங்களுக்கு இதை பற்றி தெரியாது’ என கூறியுள்ளார்.

இப்போது ஜெய்சுந்தர் மேலும் உஷாராகிறார். சற்று சமயோஜிதமாக, ‘சரி.. எனக்கு கார் வேண்டாம். ஆனா நான் செலுத்த வேண்டிய வரியை அந்த பணத்தில் கழிச்சுகிட்டு மீதி பணத்தை என் அக்கவுண்ட்டுக்கு அனுப்புங்க’ என்று கூற,  அந்த பெண் இம்முறை உஷாராக‘அப்படி செய்ய முடியாது சார். நீங்க வரியைக் கட்டுங்க. அப்பதான் பணம் வந்து சேரும்’ என்று சொல்கிறார்.  இம்முறை கிடுக்குப்பிடியாக ஜெய்சுந்தர், ‘இது நம்புற மாதிரி இல்லையே. ஏமாத்து வேலை மாதிரி தெரியுதே? உண்மையிலேயே அந்த கம்பெனியில் இருந்துதான் பேசுறீங்களா?’ என்றதும், ‘ஹலோ.. வாய்ஸ் பிரேக் ஆகுது, நான் கட் பண்ணிட்டு கூப்படுறேன்’ என்று கட் பண்ணிவிட்டார். அதன் பின் அந்த போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டதாக ஜெய்சுந்தர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் வங்கிகளில் இருந்தும், இதுபோன்று ஆன்லைன் நிறுவனங்களின் குலுக்கல் பரிசுப் பிரிவில் இருந்தும் அழைப்பதாகக் கூறி வட நாட்டவர்கள் தொனியில் பேசும் போன்கால்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

Tags : #CHEAT #PRANK