'வீட்டுல வருவாங்களான்னு தெரியாது'...'காதலர்களின் ப்ரீ வெட்டிங் ஷூட்'...வைரலாகும் புகைப்படங்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Dec 13, 2019 10:50 AM

கேரளாவில் ஓரே பாலினத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீம் மற்றும் நிவேத் அந்தோனி என்பவர்கள் திருமணம் செய்து கொள்ள இருக்கும் நிலையில், இருவரது  ப்ரீ வெட்டிங் ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Kerala Gay Couple\'s Romantic Pre-Wedding Photoshoot Goes Viral

ஓரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் உறவு கொள்வதும் திருமணம் செய்வதும் சட்டப்பிரிவு 377-ன் படி இந்தியாவில் தண்டனைக்குரிய செயலாக இருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஓரின சேர்க்கை குற்றமில்லை என்று தீர்ப்புவழங்கியது. அதனைத்தொடர்ந்து இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ஓரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துவருகின்றனர்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம், நிகேஷ் உஷா புஷ்கரன் மற்றும் சோனு ஆகியோர் திருமணம் செய்துகொண்டதாக ஃபேஸ்புக்கில் அறிவித்தனர். அவர்களது திருமணம் கேரளாவில் நடைபெற்ற முதல் ஓர்பால் திருமணம் ஆகும். இந்நிலையில் கேரளாவை சேர்ந்த அப்துல் ரஹீம் மற்றும் நிவேத் அந்தோனி என்பவர்கள் திருமணம் செய்து கொள்ளவுள்ளார்கள். அதற்காக திருமணத்திற்கு முன்பு நடத்தப்படும் 'ப்ரீ வெட்டிங் ஷூட்டில்' இருவரும் ஏராளமான புகைப்படங்களை எடுத்து கொண்டார்கள்.

இதுகுறித்து பேசிய நிவேத் ஆண்டனி சல்லிக்கல் மற்றும் அப்துல் ரெஹிம், '' மற்ற இந்திய திருமணங்கள் போன்றே தன்பாலின ஈர்ப்பினர்களின் திருமணமும் அழகாக இருக்கும் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக தான், நாங்கள் எங்களின் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்தோம். ஆனால் இது வைரலாகும் என்று நினைக்கவில்லை.

மேலும் இந்த திருமணத்திற்கு இரு வீட்டிலும் சம்மதம்  தரவில்லை. அதனால் அவர்கள்  திருமணத்தில் பங்கேற்கமாட்டார்கள். ஆனாலும் எங்களின் மீது வெறுப்பு ஏதும் அவர்களுக்கு இல்லை. நிவேத் தரப்பில் அவருடன் அவருடைய திருநங்கை அம்மாவும், திருநங்கை சகோதரியும் இந்த திருமணத்தில் பங்கேற்பார்கள் என கூறினார்கள்''. இதனிடையே இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags : #KERALA #GAY COUPLE #NIVED ANTONY CHULLICKAL & ABDUL REHIM #PRE-WEDDING PHOTO SHOOT #KERALA GAY COUPLE #VIRAL