'லஞ்சம் தானே நாளைக்கு வாங்கிக்கங்க'... 25 வருஷமா இத ஒரு 'தொழிலாவே' பண்ணிட்டு இருக்கேன்... மதுபான உரிமையாளர் செய்த 'ஷாக்கடிக்கும்' வேலை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Feb 21, 2020 02:04 PM

லஞ்சம் கேட்ட நபரை போலீசிடம் மாட்டிவிட்ட மதுபான உரிமையாளர், இதுபோல போட்டுக் கொடுப்பதில் செஞ்சுரி அடித்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Central Government Employee Arrested for Asking Bribe

மும்பை மெரின் டிரைவ் என்னும் பகுதியில் அசோக் பாட்டீல் என்பவர் மதுபான விடுதி நடத்தி வருகிறார். சம்பவ தினத்தன்று இவரது கடைக்கு வந்த ராஜேந்திர வாக்மாரே என்பவர் மத்திய உள்துறை பாதுகாப்பு அமைச்சகத்தில் தான் வேலைபார்த்து வருவதாக அறிமுகம் செய்து கொண்டார். தொடர்ந்து நீங்கள் நடத்தி வரும் இந்த மதுபான விடுதிக்கு முறையான அனுமதி வாங்கவில்லை.

எனவே இதுகுறித்து புகார் அளிக்காமல் இருக்க மாதந்தோறும் தனக்கு 7 லட்ச ரூபாய் வேண்டும் என மிரட்டி இருக்கிறார். இதைத்தொடர்ந்து மதுபான விடுதி உரிமையாளர் பிறகு பணம் தருவதாக கூறி, அவரை அனுப்பிவிட்டு நேராக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் பணம் தருவதாக நேற்று ராஜேந்திர வாக்மாரேயை மதுபான விடுதிக்கு அழைத்தார். இதையடுத்து அங்கு வந்த அவரை, மெரின் டிரைவ் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவருக்கு இதில் உடந்தையாக இருந்த கூட்டாளிகள் மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் கடந்த 25 ஆண்டுகளில் இதுபோல லஞ்சம் கேட்ட தீயணைப்பு துறையினர், வருமான வரித்துறையினர், போலீசார் உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்டோரை அந்த மதுபான விடுதி உரிமையாளர் போலீசில் போட்டுக்கொடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.