‘குடித்துவிட்டு கால் டாக்சியை இயக்கிய டிரைவர்'... 'காருக்குள்ளேயே மாணவிக்கு நேர்ந்த கொடூரம்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Aug 06, 2019 02:45 PM
டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, அவரை சாலையில் கால்டாக்ஸி ஓட்டுநர் வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழத்தில், 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமை இரவு டெல்லி மந்திர் மார்க் பகுதியில், தனது தோழியின் பிறந்தநாள் விழாவுக்கு அவரது வீட்டுக்கு சென்றார். பின்னர் இரவு 8 மணியளவில் அந்த மாணவி, அங்கிருந்து விடுதிக்கு திரும்புவதற்காக கால்டாக்ஸி புக் செய்துள்ளார். அவரை அழைத்துச் சென்ற கால்டாக்சி ஓட்டுநர் குடித்திருந்ததாகத் தெரிகிறது. பின்னர், காரில் அழைத்துச் சென்ற மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, சாலையோரம் வீசிவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
டெல்லி ஐஐடி அருகே 3 மணிநேரத்திற்கும் மேலாக, சுயநினைவின்றி மயங்கி கிடந்த அந்த மாணவியை மீட்ட அக்கம்பத்தினர், அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது. சிகிச்சை பெற்ற மாணவியின் அடையாள அட்டை மூலம், மருத்துவமனை நிர்வாகத்தினர், மாணவியை சிகிச்சைக்கு பின்னர் பல்கலைகழக விடுதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் தமக்கு நேர்ந்தவற்றை விடுதி காப்பாளரிடம் தெரிவித்த மாணவி, போலீசிலும் நேரில் சென்று புகார் அளித்தார். இந்நிலையில் மாணவியின் புகாரை ஏற்ற போலீசார், அவரை ஜீப்பில் அழைத்துக்கொண்டு விடுதிக்கு சென்று விட்டுவிடுவதாக தெரிவித்துள்ளனர். அப்போது பெண் காவலர் வந்தால், தனக்கு உதவியாக இருக்கும் என்று மாணவி தெரிவித்ததற்கு, அங்கிருந்த போலீசார் மறுப்பு தெரிவித்ததாக மாணவி கூறியுள்ளார். இதையடுத்து தற்போது டெல்லி மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.
மாணவி சுயநினைவின்றி கிடந்த இடத்தில் 3 மணிநேரமாக போலீஸ் ரோந்து இல்லாமல் இருந்திருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள மகளிர் ஆணையம், விளக்கம் கேட்டு போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தற்போது வழக்குப்பதிவு செய்த போலீசார், பாதிக்கப்பட்ட மாணவியின் கையில், செல்போன் இல்லாததால், நண்பர் மூலம் கால் டாக்சி புக் செய்து சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர். குடித்துவிட்டு, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கால் டாக்சி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.