legend others aadi

டெல்லி முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் காலமானார்; பிரதமர் மோடி, ராகுல் இரங்கல்..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jul 20, 2019 06:10 PM

டெல்லி முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் (81) இன்று காலமானார்.

Sheila Dikshit former Delhi CM and Congress leader passes away

1998ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை டெல்லி முதலமைச்சராக 15 ஆண்டுகள் பதவி வகித்தவர் ஷீலா தீட்சித். இவர் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தலைமையிலான மத்திய மந்திரி சபையில் இணை மந்திரியாகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

இன்று காலை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷீலா தீட்சித் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பதிவில், “டெல்லி முன்னாள் முதல்வரும், மூத்த அரசியல் தலைவருமான ஷீலா தீட்சித் மறைவு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆட்சி காலத்தில்தான் தலைநகர் பலவிதமான மாற்றங்களுக்கு ஆட்பட்டது. அந்த மாற்றங்கள் அவரை எப்போதும் நினைவுகூறும். அவரது குடும்பம் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “ஷீலா தீட்சித் மறைவு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இணக்கமான மற்றும் மரியாதைக்குரிய ஆளுமையாகத் திகழ்ந்த அவர், டெல்லியின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செலுத்தியவர். அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி” எனக் கூறியுள்ளார்.

 

 

காங்கிரஸ் கட்சி தனது அன்பான மகளை இழந்துவிட்டது என ராகுல் காந்தி தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார். அவருடன் தனிப்பட்ட முறையில் நெருக்கமான உறவு பாராட்டி வந்ததாகக் குறிப்பிட்டுள்ள ராகுல் டெல்லி மக்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

 

 

Tags : #SHEILADIKSHIT #CONGRESSLEADER #DELHI #CM