‘க்ளாஸ் லீடர்’ தேர்தலில் 6 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி..! மாணவனின் விபரீத முடிவால் சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Jul 20, 2019 11:01 PM
வகுப்பு லீடர் தேர்ததில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள ரமன்னபேட்டை என்ற பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ‘க்ளாஸ் லீடர்’ பதவிக்காக மாணவர்களுக்கு இடையே தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. அதில் 13 வயது மாணவர் சக மாணவியிடம் 6 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் அவருக்கு துணைத்தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் பெண்ணிடம் தோல்வி அடைந்ததாக சகமாணவர்கள் அம்மாணவனை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவன் திடீரென காணாமல் போயுள்ளார். மகன் வீடு திரும்பாததால் மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலிஸார் விசாரணை மேற்கொண்டதில், சிட்யால்-ரமன்னபேட் ரயில் நிலையங்களுக்கு நடுவே ஒரு மாணவனின் சடலம் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலிஸார் மாணவனின் சடலத்தைக் கைப்பற்றியுள்ளனர். பின்னர் பெற்றோருக்கு தகவல் கொடுத்து மாணவனின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. பள்ளியில் மாணவர்களுக்கு இடையே நடந்த தேர்ததால் சிறுவன் தற்கொலை செய்திருக்கலாம் என மாணவனின் பெற்றோர் சந்தேகிக்கின்றனர். இதனால் போலிஸார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.