‘ஓடும் ரயிலில் மகன் கண்முன்னே’.. ‘தாய்க்கும், மகளுக்கும் நடந்த..’ பதைபதைக்க வைக்கும் சம்பவம்..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Aug 05, 2019 01:11 PM
உத்தரப்பிரதேசத்தில் கொள்ளையர்கள் தாயையும், மகளையும் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த மனிஷா என்பவர் பொறியியல் தேர்வுக்கான பயிற்சி நிறுவனத்தில் சேர்வதற்காக தன்னுடைய தாய் மீனா மற்றும் சகோதரர் ஆகாஷுடன் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவுக்கு நிஜாமுதீன் - திருவனந்தபுரம் ரயிலில் பயணமாகியுள்ளார். ரயில் உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே சென்றுகொண்டிருந்தபோது கொள்ளையர்கள் சிலர் மீனாவின் பையை தூக்கிச் சென்றுள்ளனர். பணம், செல்ஃபோன் மற்றும் முக்கியமான சான்றிதழ்கள் இருந்த அந்தப் பையை கொள்ளையர்கள் தூக்கிச் செல்வதைப் பாத்த மீனா திருடன் என சத்தம்போட, மனீஷாவும் எழுந்துள்ளார். இருவரும் சேர்ந்து பையை மீட்க கொள்ளையர்களுடன் கடுமையாகப் போராடியுள்ளனர்.
அப்போது தாய் மற்றும் மகளை அந்தப் பெட்டியின் நுழைவாயிலுக்கு இழுத்துச் சென்ற கொள்ளையர்கள் அவர்களை ரயிலில் இருந்து கீழே தள்ளியுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆகாஷ் உடனடியாக அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்த முயன்றுள்ளார். அதற்குள் ரயில் விருந்தாவன் நிறுத்தத்தை அடைய கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து ஆகாஷ் ரயில்வே போலீஸாரிடம் நடந்த விவரங்களைக் கூற அவர்கள் மீனா, மனீஷா இருவரும் கீழே தள்ளிவிடப்பட்ட இடத்திற்கு விரைந்துள்ளனர்.
ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டதால் படுகாயமடைந்திருந்த இருவரையும் போலீஸார் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் இருவருமே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதுதொடர்பாக பேசியுள்ள ரயில்வே போலீஸார், “இந்த வழக்கை விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” எனத் தெரிவித்துள்ளனர்.