‘5 ஆண்டுகளில் 20 லட்சம் ரூபாய்’.. ‘படுக்கையறையில் வைத்த ரகசிய கேமராவால்’.. ‘சிக்கிய சென்னைப் பெண்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Oct 25, 2019 05:48 PM
சென்னையில் தொழிலதிபர் வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாக திருடி வந்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை அபிராமிபுரம் பகுதியில் வசித்து வருபவர் தொழிலதிபர் பெரியவண்ணன். இவரது வீட்டின் படுக்கையறையில் இருக்கும் பீரோவில் இருந்து தொடர்ந்து பணம் திருட்டு போயுள்ளது. ஆரம்பத்தில் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அவர் அதிக தொகை காணாமல் போக குழப்பமடைந்துள்ளார். வீடு முழுவதும் சிசிடிவி கேமரா இருந்தாலும் படுக்கையறையில் கேமரா இல்லாததால் திருடியது யாரென்று தெரியாமல் இருந்துள்ளது. வீட்டில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்தபோது வெளிநபர் யாரும் வந்து செல்லாதது தெரியவந்துள்ளது. ஆனால் பணம் மட்டும் குறைந்துகொண்டே இருந்துள்ளது.
திருடுபவரை கையும் களவுமாகப் பிடிக்க பெரியண்ணன் படுக்கையறையிலும் ரகசிய கேமரா ஒன்றைப் பொருத்தியுள்ளார். பின்னர் அதில் பதிவான காட்சிகளைப் பார்த்தபோது அவருடைய வீட்டில் வேலை செய்யும் உஷா என்னும் பெண் பீரோவைத் திறந்து சாவி மூலம் காசை எடுத்துவந்தது தெரியவந்துள்ளது. தன்னிடம் சாவி இருக்க உஷா எப்படி பீரோவைத் திறந்து திருடுகிறார் எனக் கையும் களவுமாகப் பிடிக்க கேமராவில் பதிவான காட்சிகளோடு அபிராமிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில் அவர் கடந்த 5 ஆண்டுகளில் 19,85,000 ரூபாய் திருடியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. பின்னர் போலீஸார் உஷாவை பிடித்து விசாரித்த காவலர்களிடம் முதலில் திருடியதை மறுத்த உஷா பின்னர் ஒப்புக்கொண்டுள்ளார். திருடிய பணத்தில் 40 சவரன் தங்க நகைகளை அவர் வாங்கி வைத்திருந்ததும், வீட்டிலும் சில லட்சம் பணத்தை வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.