'கெஜ்ரிவால் ஜெயிச்சது எப்படினு தெரியுமா?'... 'டெல்லி தேர்தல்'... சிறப்பு தொகுப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாதொடர்ந்து மூன்றாவது முறையாக டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றியதன் மூலம் மீண்டும் முதல்வராகிறார், அர்விந்த் கெஜ்ரிவால்.

ஊழலுக்கு எதிராக போர்க் கொடி தூக்கி, அரசியல் களம் கண்டு 2013ம் ஆண்டு டெல்லியில் ஆட்சியைப் பிடித்தவர், அர்விந்த் கெஜ்ரிவால். அதன் பின், 2015ம் ஆண்டு நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில், அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக வெற்றி வாகை சூடியது.
இந்நிலையில், தற்போது மூன்றாவது முறையாக டெல்லியின் அரியணை ஏறும் கெஜ்ரிவால், மக்களைத் தன்வசப்படுத்தி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது எப்படி என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
இந்த தேர்தலில், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளின் முதல்வர் வேட்பாளர்கள், கெஜ்ரிவால் அளவிற்கு மக்கள் செல்வாக்கு பெற்றவர்களாக இருக்கவில்லை. இது, கெஜ்ரிவாலுக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, கட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்களிடம் அறிக்கை அளிப்பது, மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பது, பெண்களுக்கு இலவச பஸ் மற்றும் இலவச மெட்ரோ, வை-ஃபை (wi-fi) வசதி போன்ற சலுகைகள், டெல்லி மக்களை இந்த தேர்தலில் வெகுவாக கவர்ந்துள்ளது.
இவை அனைத்தையும் விட, தேர்தலில் வெற்றிபெற ஒரு தலைவருக்குத் தேவையான தகுதி, "கரிஸ்மா", அதாவது "வசீகரம்". ஆட்சியிலும் நிர்வாகத்திலும் சிறு தவறுகள் நடந்தாலும், அதை 'கெஜ்ரிவால்' என்ற பிம்பம் மறைத்துவிடும் அளவிற்கு, தன்னுடைய இமேஜ்-ஐ மிக நுட்பமாக கெஜ்ரிவால் கட்டமைத்துள்ளார்.
வீடியோ கான்ஃபெரன்சிங் (video conferencing), திறன் செயலிகள், மெட்ரோ நிலையங்கள், ஆட்டோ நிறுத்தங்கள், சாலையோர பேனர்கள், செய்தித்தாள்களில் முழு பக்க விளம்பரங்கள் என பல்வேறு வகையில், கெஜ்ரிவால் தன்னுடைய முகத்தை மக்களிடம் தினந்தோறும் கொண்டு சேர்த்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வாக்குகளையும், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான வாக்குகளையும், ஒரு சேர அள்ளிக்குவித்துள்ளார், கெஜ்ரிவால். இதன் மூலம், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவுக்கு மாற்றாக, மிகவும் சக்தி வாய்ந்த அரசியல் ஆளுமையாக அவரை டெல்லி மக்கள் கருதியுள்ளனர் என்பது புலப்படுகிறது.
மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஷஹீன் பாக்-இல் நடந்த போராட்டத்திற்கு அவர் தேர்தலில் முன்னுரிமை அளிக்கவில்லை. இதன் மூலம், அந்த போராட்டத்தில் தனக்கென ஒரு வாக்கு வங்கியை உருவாக்கவோ, உடைக்கவோ இல்லை. நடுநிலையாக இருந்தார்.
மக்கள் கூட்டத்தில் நீண்ட நெடிய உரைகளை ஆற்றுவதற்குப் பதிலாக, டவுன் ஹால் உள்ளிட்ட இடங்களில் மக்களுடன் உரையாடினார். இவையே, கெஜ்ரிவால் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கு காரணங்களாக அமைந்துள்ளன.
