அங்க அடயாளங்கள் - 'ஒரு தும்பிக்கை, 4 கால், ஒரு வால்'... "யானையை கண்டுபுடிச்சுத் தாங்க ஐயா"... விக்கித்து போன 'நீதிபதி'...
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Suriyaraj | Jan 10, 2020 10:56 AM
பாசத்துடன் தான் வளர்த்த யானையை கண்டுபிடித்துத் தருமாறு உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு (habeas corpus) அளித்த பாகனைக் கண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதிர்ச்சியடைந்தார்.
வனவிலங்குகளை வளர்ப்பதற்கு டெல்லி ஏற்ற இடம் இல்லை என்பதால் அங்கு வளர்க்கப்படும் யானைகளை பறிமுதல் செய்து மறுவாழ்வு மையத்துக்கு அனுப்புமாறு கடந்த 2016ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் டெல்லி ஷாகர்பூர் பகுதியச் சேர்ந்த சதாம் என்பவர் லட்சுமி என்ற யானையை மிகுந்த பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி யானையை அழைத்துச் செல்ல போலீசார் வந்தபோது, அளவு கடந்த பாசத்தால் யானையை பிரிய மனமில்லாத பாகன சதாம் தனது யானை லட்சுமியுடன் தப்பிச் சென்றார்.
இதையடுத்து டெல்லி காவல்துறையினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்து சதாம் மற்றும் யானையை தேடி வந்தனர். யமுனை நதிக்கரையோர காட்டுப்பகுதியில் யானை லட்சுமியை வனத்துறையினர் கடந்த செப்டம்பர் மாதம் பிடித்தனர். அதனுடன் மறைந்து வாழ்ந்து வந்த சதாமும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து டெல்லி வனத்துறையினர் யானையை மீட்டு ஹரியானாவில் உள்ள வனவிலங்குகள் முகாமில் அடைத்தனர்.
சதாம் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 68 நாட்களுக்குப் பிறகு சிறையிலிருந்து பிணையில் வெளிவந்த சதாம், தனது யானையை மீட்டுத் தரவேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். தான் யானையின் உரிமையாளர் அல்ல, யானையின் நண்பன் என்பதால் தன்னிடமே தனது லட்சுமியை ஒப்படைக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவைப் பார்த்து அதிர்ந்து போன தலைமை நீதிபதி, "யானை என்ன இந்திய குடிமகனா? இந்திய குடிமகன் ஒருவரை கண்டுபிடிக்க மட்டுமே ஆட்கொணர்வு மனுவைப் பயன்படுத்த முடியும்" எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.