நிர்பயா குற்றவாளிகளை 'தூக்கில்' போட நான் தயார்... '4 தலைமுறை' பணியாளர் ஒப்புதல்... 'சேவையாக' கருதுவதாக விளக்கம்...
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Suriyaraj | Jan 08, 2020 01:44 PM
நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளான 4 பேரையும் தூக்கில் போடுவதற்கு உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 4 தலைமுறை பணியாளர் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரும் தூக்கில் போடப்பட வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அதற்கான ஏற்பாடுகள் திகார் சிறையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது எப்போதாவது அரிதாகவே நடக்கும் என்பதால், கைதிகளை தூக்கில் போடுவதற்கு என்று தனியாக எந்த சிறையிலும் ஊழியர்கள் நிரந்தரமாக இருப்பது இல்லை. இதற்காக தற்காலிக ஊழியர்களை அந்த நேரத்தில் மட்டும் அழைத்து கொள்வது வழக்கம். குறிப்பாக பரம்பரையாக இந்த பணியில் ஈடுபடும் சிலரைத்தான் ஈடுபடுத்துவார்கள்.
அதன்படி உத்தரபிரதேச மாநிலம் மீரட் சிறையில் பவான் ஜலாத் என்ற ஊழியருக்கு மீரட் சிறை நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இவருடைய குடும்பத்தினர் 4 தலைமுறையாக தூக்கு தண்டனையை நிறைவேற்றும் ஊழியர்களாக பணியாற்றி வந்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சுதந்திர போராட்ட வீரர்களான பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோரை லாகூர் சிறையில்பவான் ஜலாத்தின் தாத்தாதான் தூக்கில் போட்டார். அதைத்தொடர்ந்து அவரது பரம்பரையே இந்த தொழிலில்தான் இருக்கிறது.
மீரட்டில் பவான் ஜலாத் சைக்கிளில் பெட்ஷீட் வியாபாரம் செய்து வருகிறார். 4 குற்றவாளிகளையும் தூக்கில் போட தயாராக இருக்கும்படி ஏற்கனவே கடந்த மாதம் 16-ந்தேதி மீரட் சிறை நிர்வாகத்தினர் அவரிடம் தெரிவித்துள்ளனர் . இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பவான் ஜலாத் 4 குற்றவாளிகளையும் தூக்கில் போடும் இந்த பணியை செய்வதற்கு நான் தயாராக இருப்பதாகவும், இது போன்ற கொடிய குற்றவாளிகளை கொல்வதன் மூலம் சமுதாயத்துக்கு அழுத்தமான ஒரு செய்தியை சொல்வதாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.
