கணவரை நம்பி குழந்தைகளை விட்டுவிட்டு, ‘மார்க்கெட் போன மனைவி’.. வீட்டுக்கு வந்ததும் காத்திருந்த அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லி மெட்ரோ நிலையத்தில் ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தந்தை ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டதும், அதற்கு முன்னதாக தனது குழந்தைகளை அவர் கழுத்தை நெரித்துக் கொன்றதுமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்துகொண்ட நபர் மணல் காகிதம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில், இவர் பணிபுரிந்து வந்த நிறுவனம் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர்தான் இழுத்து மூடப்பட்டது. இதனால் வேலையும் வருமானமும் இன்றி குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். வாடகை வீட்டில் மனைவி மற்றும் 14 வயது மகள் மற்றும் 6 வயது மகனுடன் வசித்து வந்த இந்த நபர், ஞாயிற்றுக் கிழமை மதியம் 3 மணி அளவில் மனைவி, மார்க்கெட்டுக்கு போன நேரமாக பார்த்து, விரக்தியில் தனது குழந்தைகளை வீட்டில் வைத்து கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, வீட்டை வெளியே பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.
மாலை 6.45 மணி அளவில் வீட்டுக்கு வந்த அவரது மனைவி வீடு பூட்டியிருந்ததை அடுத்து ஹவுஸ் ஓனரிடம் இருந்த மாற்றுச்சாவியை வாங்கி வீட்டைத் திறந்து பார்த்த போது தனது குழந்தைகள் கொல்லப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் போலீஸாருக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்லியுள்ளார். ஆனால் அதற்குள் அப்பெண்ணின் கணவர் வடக்கு டெல்லியில் உள்ள ஹெய்தேர்பூர் ரயில் நிலையத்தில் மாலை 5.45 மணி அளவில் ஓடும் மெட்ரோ ரயிலுக்கு முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் கடிதங்கள் எதுவும் கிடைக்கப் பெறாத சூழலில், இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.