'ஆதரவற்றோர்' உடல்களை அடக்கம் செய்வது ஏன்?... முதியவரின் வாழ்வில் நிகழ்ந்த 'மாபெரும் சோகம்'... 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவித்த மத்திய அரசு...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Jan 27, 2020 06:35 AM

உத்தரபிரதேசத்தில் முகமது ஷெரிப் என்ற முதியவர், ஆதரவற்ற பல்லாயிரம் உடல்களை அடக்கம் செய்து வருகிறார். அவரது பலன் எதிர்பாராத இந்த சேவையை பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவித்து கவுரவித்துள்ளது.

An elderly man who buries orphan\'s bodies-Padma Shri honored

தங்கள் துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு இந்தாண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியலை, மத்திய அரசு  25ஆம் தேதி அறிவித்தது. இதில், 7 பேருக்கு பத்ம விபூஷண், 16 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டது.

பத்மஸ்ரீ விருது பெறுபவர்களில் ஒருவரான உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதான முதியவர் முகமது ஷெரிப்  என்பவர், பல ஆதரவற்ற உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்துள்ளார். இவரின் பலன் எதிர்பாராத இந்த சேவையை அறிந்த மாநில அரசு, அவரை பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி ஷெரிப்புக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம், அயோத்தியில் சைக்கிள் பழுதுபார்க்கும் கடை வைத்திருக்கும் ஷெரிப் கடந்த 27 ஆண்டுகளாக ஆதரவற்ற நிலையில் இறப்பவர்களுக்கு ஜாதிமத பேதமின்றி தனது சொந்த செலவில் இறுதி சடங்கு செய்து வந்துள்ளார். இதுவரையில் பல்லாயிரம் உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்துள்ளார்.

ஷெரிப்பின் இந்த சேவை மனப்பான்மைக்கு தனது வாழ்வில் நிகழ்ந்த மாபெரும் சோகமே காரணம் என அவர் கூறியுள்ளார்.

1993ம் ஆண்டில் சுல்தான்பூரில் வேலைக்கு சென்ற அவரது மகன் கொலை செய்யப்பட்டார். ஆதரவற்றவர் என கருதி போலீசார் அவரது உடலை அடக்கம் செய்தனர். ஆனால் அதுப்பற்றி ஷெரிப்புக்கு ஒரு மாதம் கழித்து தான் தெரியவந்தது. அப்போது தான் ஆதரவற்றவர்களுக்கு இறுதிச்சடங்குகள் செய்ய வேண்டும் என தான் முடிவெடுத்ததாகக் கூறுகிறார் ஷெரிப். இதுவரை 3000 ஹிந்து மற்றும் 2500 இஸ்லாமிய ஆதரவற்றவர்களின் உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஜாதிமத பேதம் கடந்த ஷெரிப்பின் இந்த சேவை மனப்பான்மையை பலரும் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.

Tags : #PADMA SHRI #UTTARPRADESH #SHERIF #HONOURED U.P. #BURIED BODIES