‘குடும்பத்த காப்பாத்தணும்’.. ‘2 வருஷ கனவு'.. போலீஸ் உடற்தகுதி தேர்வில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jan 17, 2020 11:51 AM

காவலர் பணிக்கான உடல் தேர்வின்போது இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Young girl dies during PAC physical eligibility test in UP

உத்தர பிரதேசம் மாநிலம் பாக்பட் மாவட்டத்தில் உள்ள பாசல்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்ஷிகா (20). இவரது அப்பா ஒரு விவசாயி. இவருக்கு இரண்டு தம்பிகள் உள்ளனர். ஏழை குடும்பத்தை சேர்ந்த அன்ஷிகாவுக்கு போலீஸ் வேலையில் சேர வேண்டுமென கனவுகண்டுள்ளார். மேலும் குடும்பத்தை காப்பாற்றவேண்டும் என்ற பொறுப்பும் அவருக்கு இருந்துள்ளது. அதனால் கடந்த இரண்டு வருடங்களாக கடுமையான பயிற்சியை மேற்கொண்டுள்ளார். இதனை அடுத்து இந்த முறை எழுத்து தேர்வில் தேர்ச்சியடைந்த அன்ஷிகா உடற்தகுதி தேர்வுக்கு சென்றுள்ளார்.

உடற்தகுதி தேர்வின் ஒருபகுதியான ரன்னிங்கிற்கு அன்ஷிகா தயாராக இருந்துள்ளார். இதனை அவரது தந்தை மைதானத்துக்கு வெளியே நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். 2.4 கிலோமீட்டர் தூரத்தை 14 நிமிடங்களுக்கு ஓடி முடித்த அன்ஷிகா திடீரென மைதானத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அன்ஷிகாவை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேலும் உடற்தகுதி தேர்வுக்கு வந்த ஷாலினி என்ற மற்றொரு பெண்ணும் இதேபோல மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் தற்போது நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காவலர் ஆகவேண்டும் என நினைத்த இளம்பெண் உடற்தகுதி தேர்வில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #POLICE #UTTARPRADESH #DIES #WOMAN #PHYSICALTEST