VIDEO: 'ஸ்கூட்டரில்' சென்ற பிரியங்கா காந்தி... 'துரத்தி' சென்ற போலீசார்... கீழே பிடித்து 'தள்ளியதாக' குற்றச்சாட்டு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Dec 29, 2019 12:04 AM

ஸ்கூட்டியில் சென்ற தன்னை உத்தர பிரதேச போலீசார் கீழே பிடித்து தள்ளியதாக, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

Watch Video: Priyanka Gandhi Car stopped by UP Police

மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து  போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 15 பேர் இதுவரை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் தாங்கள் யாரையும் சுடவில்லை என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். உ.பி-யில் நடைபெற்ற போராட்டத்தின்போது முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர். தாராபுரி (76) கைது செய்யப்பட்டார்.

அவரை சந்திப்பதற்காக பிரியங்கா காந்தி காரில் பயணம் செய்தார். ஆனால் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து காங்கிரஸ் தொண்டர் ஒருவரின் ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்து பிரியங்கா காந்தி பயணம் செய்தார். அவரை துரத்தி சென்ற போலீசார் வழிமறித்தனர். இதையடுத்து நடந்து சென்று தாராபுரியை, பிரியங்கா காந்தி சந்தித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பிரியங்கா காந்தி, ''நான் தாராபுரி அவர்களின் வீட்டுக்கு செல்லும் வழியில் உத்தரப்பிரதேச காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டேன். இதனையடுத்து நான் இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தேன். பின்னால் வந்த காவல்துறையினர் என்னை வழிமறித்தனர். ஒரு பெண் போலீஸ் அதிகாரி என்னை கழுத்தை பிடித்து இழுத்தார். இன்னொரு போலீஸ் என்னை கீழே தள்ளிவிட்டார்.

இதையடுத்து நான் நடந்தே சென்றேன். நகரின் மையத்தில் எங்களை தடுத்து நிறுத்துவதற்கு என்ன காரணம்? யாரை வேண்டுமானாலும் நடுவழியில் தடுத்து நிறுத்துவீர்களா?,'' என போலீசாரிடம் கேள்வி எழுப்பினார். ஆனால் தாங்கள் பிரியங்கா காந்தியிடம் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை என உத்தர பிரதேச போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

பிரியங்கா காந்தி ஸ்கூட்டரில் சென்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது.