'வேலை இல்லாததால்’... ‘சொந்த ஊருக்கு செல்லும்போது’... ‘தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் நடந்த இரு வேறு விபத்துகளில் 14 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் இருந்து உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு, சுமார் 70 தொழிலாளர்கள் லாரியில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், அதிகாலை 3 மணியளவில், தொழிலாளர்கள் வந்த லாரி மத்தியப் பிரதேசம் குணாவில் ஒரு பைபாஸ் சாலையில் சென்று கொண்டு இருந்த போது எதிரே வந்த பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் லாரியில் பயணம் செய்த தொழிலாளர்கள் 8 பேர் அதே இடத்தில் பலியானார்கள். படுகாயம் அடைந்த 54 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் மற்றொரு சோகமான சம்பவத்தில், நேற்றிரவு மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் ஒரு நெடுஞ்சாலையில் 6 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது உத்தரப்பிரதேச அரசு பேருந்து ஒன்று மோதி 6 பேரும் பலியானார்கள்.
சொந்த ஊருக்கு செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் சமீபத்திய நாட்களில் நாடு முழுவதும் அதிகம் பதிவாகியுள்ளன. கடந்த வாரம், மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் ரயில் தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு சரக்கு ரயில் அவர்கள் மீது ஏறியதில் 16 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.