'ஒரு நிமிஷம் போகாதன்னு சொல்லி இருந்தா'... 'பொண்ணு உசுரோட இருந்திருக்குமே'...சென்னை அருகே நடந்த சோகத்தின் உச்சம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு நேரத்தில் ஏரியில் மூழ்கி 3 மாணவிகள் பரிதாபமாக இறந்த நிலையில், அவர்களைக் காப்பாற்ற முயன்ற பெண்ணும் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த படப்பை, ராஜீவ்காந்தி சாலை பகுதியைச் சேர்ந்தவர் குணா. தச்சு தொழில் செய்து வரும் இருவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினர்களான தணிகாசலம் என்பவருடைய மனைவி திலகா, குமரேசன் என்பவருடைய மகள் சத்யா, கணேசன் என்பவருடைய மகள் கலையரசி, ஓட்டுநர் ராஜு என்பவருடைய மகள் பூர்ணிமா, மகன் ஹரி ஆகியோருடன் நேற்று காலை மணிமங்கலம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான பெரிய ஏரிக்குக் குளிக்கச் சென்றனர்.
பெரியவர்கள் உடன் செல்கிறார்களே என்ற தைரியத்தில் பெற்றோர்களும் அவர்களது பிள்ளைகளை அனுப்பி வைத்துள்ளார்கள். ஏரிக்குச் சென்ற அனைவரும் குளிக்கச் செல்ல, சித்ரா, திலகா இருவரும் ஏரிக்கரையில் துணி துவைத்துக் கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் பூர்ணிமா, சத்யா, கலையரசி, ஹரி ஆகியோர் ஏரியில் இறங்கிக் குளித்துக்கொண்டு இருந்தனர்.
இந்நிலையில் திடீரென ஏரியிலிருந்து அலறல் சத்தம் கேட்டது. அப்போது கரையிலிருந்த சித்ரா, திலகா ஆகிய இருவரும் சுதாரிப்பதற்குள், ஏரியில் குளித்துக் கொண்டிருந்த 4 பேரும், எதிர்பாராதவிதமாக ஏரியின் ஆழமான பகுதிக்குச் சென்று விட்டார்கள். அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அடைந்த திலகா, ஏரிக்குள் குதித்து அவர்களைக் காப்பாற்ற முயன்றார். அப்போது அவரும் நீரில் மூழ்கினார்.
இதனைச் சற்றும் எதிர்பாராத சித்ரா, திலகா உள்பட 5 பேரைக் காப்பாற்ற ஏரியில் குதித்தார். இதையடுத்து நீந்திச் சென்ற சித்ரா, சிறுவன் ஹரி மற்றும் திலகா ஆகிய இருவரையும் காப்பாற்றி கரைக்குக் கொண்டு வந்தார். பின்னர் கலையரசி, சத்யா, பூர்ணிமா ஆகியோரையும் காப்பாற்ற முயன்ற போது, எதிர்பாராத விதமாக அவர்களுடன் சேர்ந்து சித்ராவும் தண்ணீரில் மூழ்கினார்.
இதைப் பார்த்து கரையில் நின்ற திலகா கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அந்த பகுதி பொதுமக்கள், நீரில் மூழ்கியவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் 4 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், ஏரியில் மூழ்கி இறந்த 4 பேரின் உடல்களையும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காகக் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பலியானவர்களில் கலையரசி சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ்1-ம், சத்யா கரசங்கால் பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பும், பூர்ணிமா 3-ம் வகுப்பும் படித்து வந்தனர். உயிர் தப்பிய ஹரி 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.
இதற்கிடையே ஒரு நிமிஷம் போகாதன்னு கூறி இருந்தால், பொண்ணு உயிரோடு இருந்திருக்குமே எனச் சிறுமியின் பெற்றோர் கதறி அழுதார்கள். ஏரியில் மூழ்கி ஒரே பகுதியைச் சேர்ந்த 3 பள்ளி மாணவிகள் உள்பட 4 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.