'புருஷன் வருவாருன்னு காத்துக்கிடந்த மனைவி'... 'சவப்பெட்டியில் வந்த கணவன்'... நெஞ்சை ரணமாக்கும் சோகம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனது கணவன் வருவார் என 3 குழந்தைகளுடன் மனைவி காத்திருந்த நிலையில், இறந்த நிலையில் கணவனின் உடல் வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வேலை நிமித்தமாக தங்களது சொந்த ஊரை விட்டு மற்ற மாநிலங்களுக்கு வேலைக்காக சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு குடும்பத்துடன் நடந்தே செல்கின்றனர்.
இந்நிலையில் சகீர் அன்சாரி என்ற 26 வயது இளைஞர், டெல்லியில் இருந்து 1000 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள பீகாருக்கு, தனது ஏழு நண்பர்களுடன் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார். கடந்த மே 5ஆம் தேதி பயணத்தை தொடங்கிய இவர்களால் லக்னோவை மட்டுமே அடைய முடிந்தது. இதையடுத்து களைப்படைந்த நண்பர்கள் அனைவரும் கடந்த சனிக்கிழமை காலை 10 அளவில் சாலையோரத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.
அப்போது வேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, அன்சாரி மீது மோதியது. மோதிய வேகத்தில் அவர் தூக்கி வீசப்பட, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அன்சாரியின் நண்பர்கள் மரத்தின் நடுவே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்ததால் அவர்கள் உயிர் தப்பினார்கள். இதையடுத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து பணம் வசூலித்து ஆம்புலன்சில் அன்சாரியின் உடலை அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
தனது கணவனை காண3 குழந்தைகளுடன் வீட்டில் காத்துக்கொண்டிருந்த அன்சாரியின் மனைவி, சவப்பெட்டியில் கணவன் வந்ததை பார்த்து கதறி அழுதார். கொரோனா நேரடியாக பல பாதிப்புகளை பலரது வாழ்க்கையில் ஏற்படுத்தியிருந்தாலும், இதுபோன்று அன்றாடம் கஷ்டப்படும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் பல ரணமான சோகங்களை தினம் தினம் ஏற்படுத்தி கொண்டு தான் இருக்கிறது.