‘கல்யாணமாகி 4 மாசம்தான் ஆகுது’.. தீவிரவாத தாக்குதலில் ‘வீரமரணம்’ அடைந்த கணவன்.. கலங்க வைத்த போட்டோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | May 06, 2020 06:47 PM

தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த கணவரின் உடலை சோகத்துடன் பார்த்தவாறு இருந்த மனைவியின் புகைப்படம் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Major Anuj Sood was killed in anti terror operation in Handwara

கொரோனா வைரஸ் தாக்குதல் ஒருபுறம் இருக்க, மறுபுறம் இந்திய எல்லையில் தீவிரவாத தாக்குதல் அன்றாடம் அரங்கேறிவருகிறது. கடந்த சனிக்கிழமை இரவு காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாரா பகுதியில் உள்ள சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது திடீரென தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடந்தினர். இதில் இரண்டு மூத்த ராணுவ வீரர்கள் உட்பட ஐந்து ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் உடல்கள் அவர்களது சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டன. அதில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர் அனூஜ் சூட்டின் சடலத்துக்கு அருகில் அவரது மனைவி அமர்ந்து கணவரின் முகத்தையே சோகமாக பார்த்துக்கொண்டிருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை கலங்க வைத்துள்ளது.

தனது மகனின் வீரமரணம் குறித்து தெரிவித்த அனூஜ் சூட்டின் தந்தை, ‘என் மகன், மகள் இருவரையும் என் நாட்டுக்காக பணிபுரிய அனுப்பினேன். என் குழந்தைகள் ராணுவத்தில் பணிபுரிகிறார்கள், தாய்நாட்டை பாதுகாக்கிறார்கள் என்பதை நினைத்து பல நேரங்களில் பெருமைப்பட்டுள்ளேன். அனூஜ் தனது 12 வயதில் இருந்தே ராணுவ வீரராக வேண்டும் என்ற கனவுடன் வளர்ந்தவர். அவருடைய பேச்சிலேயே தன் நாட்டை எவ்வளவு நேசிக்கிறார் என்பது தெரியும்.

2008ம் ஆண்டு முதல்முதலாக ராணுவ உடை அணிந்த அனூஜ்ஜை பார்க்கும்போது எவ்வளவு பெருமையாக இருந்ததோ, இப்போது அவரது சடலத்தையும் அதே பெருமையுடன்தான் பார்க்கிறேன். அவர் தாய்நாட்டை காக்க உயிர் கொடுத்திருக்கிறார். இந்த வீரமணத்துக்கு நான் அழமாட்டேன். அவருக்கு வீரவணக்கம் செலுத்த வேண்டிய நேரம் இது.

ஆனால் அனூஜுக்கு திருமணம் ஆகி நான்கு மாதங்கள் தான் ஆகிறது. அடுத்த சில மாதங்களில் அவரை பார்க்கப்போகிறோம் என்று அனூஜுக்காக காந்திருந்த அவரது மனைவி அக்ரித்தியை எப்படி தேற்றுவது என்று தெரியாமல் நிலை குலைந்து நிற்கிறோம்’ என வேதனையுடன் தெரிவித்தார். வீரமரணம் அடைந்த அனூஜின் உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.