'சாகும் போது சந்தோசமா சாகணும்ன்னு சொல்லுவாரு'... 'ஆனா அப்பா எங்கன்னு பையன் கேப்பானே'... நொறுங்கி போன மனைவி'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | May 06, 2020 12:18 PM

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள மூன்று வாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்த செல்லச்சாமி. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருந்த இவர், ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மகன் சந்திரசேகர். சிறு வயது முதலே ராணுவத்தில் பணி செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த அவர், கடந்த 2014-ம் ஆண்டு சி.ஆர்.பி.எப். பணியில் சேர்ந்தார். பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் தான் காஷ்மீருக்குச் சென்ற அவர், அங்குப் பணி செய்து வந்துள்ளார்.

CRPF Jawan Chandrasekar was killed in Kupwara Jammu and Kashmir

இந்தநிலையில் ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள வங்கம்-காசியாபாத் என்ற இடத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) வீரர்கள் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த திடீர் தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர். அதில் தென்காசியைச் சேர்ந்த சந்திரசேகரும் ஒருவர். 

சந்திரசேகருக்குத் திருமணமாகி ஜெனிபர் கிறிஸ்டி என்ற மனைவியும், 1½ வயதில் ஜான் பீட்டர் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இதனிடையே ஜெனிபர் தனது குழந்தையுடன் திருச்சியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்தச்சூழ்நிலையில் கணவர் இறந்தது குறித்து அவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட அவர் கதறி அழுதார். உடனடியாக திருச்சியிலிருந்து கார் மூலம் செங்கோட்டை மூன்றுவாய்க்கால் கிராமத்தில் உள்ள அவருடைய கணவர் வீட்டுக்கு, கிறிஸ்டி அழைத்து வரப்பட்டார்.

அப்போது தனது கணவர் குறித்து கண்ணீர் மல்கக் கூறிய கிறிஸ்டி, ''டூட்டியில் இல்லை என்றால் உடனே எனது கணவர் என்னிடம் பேசுவார். ஒரு நாள் கூட என்கிட்ட அவர் பேசாமல் தூங்கப் போனது கிடையாது. ஆனால் நேற்று முன்தினம் அவர் சாதாரணமாகப் பேசினார். ஆனால் அதற்குப் பிறகு அவர் எனக்கு போன் செய்யவே இல்லை. அதன்பின்பு இரவு 10 மணிக்கு எனது உறவினர் என்னிடம் வந்து துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்துத் தெரிவித்தார். அப்போது எனது கணவரின் காலில் அடிபட்டு இருப்பதாகக் கூறினார்கள்.

இந்த சூழ்நிலையில் ஊருக்கு உடனே போக வேண்டும் என, கார் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது தான் எனக்குச் சந்தேகம் வந்து கேட்டபோது, கணவர் இறந்த சம்பவம் குறித்து என்னிடம் கூறினார்கள். நமது நாட்டின் மீது எனது கணவருக்கு அதிகப் பற்று உண்டு. அவர் அடிக்கடி என்னிடம் பேசும் போது, நான் சாகும் போது சந்தோசமாகச் சாக வேண்டும். அதுவும் நாட்டிற்காக பணியில் இருக்கும் போது இறந்தால் மிகுந்த சந்தோசப்படுவேன் எனக் கூறுவர். கடைசியில் அவர் சொன்னது போன்றே நடந்து விட்டது. ஆனால் பையன் வந்து அப்பா எங்கே என்று கேட்டால் நான் என்ன சொல்வேன்'', எனக் கூறி கதறி அழுதார்.

இதற்கிடையே சந்திரசேகரின் உடல் இன்று (புதன்கிழமை) காலை அவரது சொந்த ஊரான மூன்றுவாய்க்கால் கிராமத்துக்குக் கொண்டு வரப்படுகிறது. பின்னர் அரசு மரியாதையுடன் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 31 வயதே ஆன இளம் வீரர், நாட்டிற்காக மரணமடைந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.