‘தொப்புள்கொடி ஈரம் கூட காயல’.. ‘இத பண்ண எப்டி மனசு வந்தச்சோ’.. வைகை ஆற்றின் நடுவே நடந்த கொடூரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | May 01, 2020 08:53 AM

வைகை ஆற்றில் நடுவே அமைக்கப்பட்டுள்ள உறைகிணற்றில் பிறந்து 2 நாள்களே ஆன குழந்தையின் சடலம் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newborn baby thrown into well at Vaigai river in Theni

தேனி-மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே வைகை ஆற்றின் கரையில் குன்னூர் என்ற கிராமம் உள்ளது. அப்பகுதியில் குடிநீர் தேவைக்காக வைகை ஆற்றின் நடுவே உறைகிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதி இளைஞர்கள், சிறுவர்கள் ஆற்றில் குளிப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை சிலர் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது ஆற்றின் நடுவே உள்ள உறைகிணற்றில் இறந்த குழந்தையின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே இதுகுறித்து ஊர்மக்களிடம் தெரியப்படுத்தவே, அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தையை வெளியே எடுப்பதற்காக தீயணைப்புதுறையினருக்கு கொடுத்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உறைகிணற்றில் கிடந்த குழந்தையின் சடலத்தை மீட்டு மேலே எடுத்து வந்தனர்.

இதுகுறித்து தெரிவித்த போலீசார், குழந்தை பிறந்து 2 நாள்கள் ஆகியுள்ளது. குழந்தையின் தொப்புள்கொடியில் கிளிப் இருந்தது. அப்படியென்றால் தொப்புள்கொடி ஈரம் காயும் முன்னரே குழந்தையை உறைகிணற்றில் வீசியுள்ளனர். நல்ல ஆரோக்கியமான குழந்தை. எப்படி கிணற்றில் போட மனம் வந்ததோ தெரியவில்லை. இதை யார் செய்தது?.. ஏன் செய்தனர்?.. குழந்தையின் பெற்றோர் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளார். பச்சிளம் குழந்தையென்றும் பாராமல் ஈவு இரக்கமின்றி கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.