‘பாட்டியுடன் வாசலில் விளையாடிய குழந்தை’... ‘சென்செஸ் எடுக்க வந்ததாகக் கூறி’... ‘மர்மநபர்களால் நடந்த பரிதாபம்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலங்கானா மாநிலத்தில் வாசலில் அமர்ந்திருந்த மூதாட்டியை நூதன முறையில் ஏமாற்றி 11 மாத ஆண் குழந்தையை மர்ம நபர்கள் கடத்திச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் சிங்கம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் துர்கேஷ் - மல்லவ்வா தம்பதியினர். இவருக்கு 11 மாதத்தில் ஹரிஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டிற்கு வெளியே தனது பாட்டியுடன் அக்குழந்தை விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர், மக்கள் தொகை கணக்கெடுக்க வந்துள்ளதாகவும், நீங்கள் இந்த வீட்டு உறுப்பினர் தான் என்பதை அறிய ஆதார் அட்டையை காண்பிக்குமாறு மூதாட்டியிடம் கேட்டுள்ளனர்.
இதனை நம்பி, ஆதார் அட்டை எடுத்துவர வீட்டிற்கு உள்ளே மூதாட்டி சென்றுள்ளார். மூதாட்டி வீட்டிற்குள் சென்றவுடன் அவ்விருவரும் கண்ணிமைக்கும் நேரத்தில் தாங்கள் எடுத்துவந்த இருசக்கர வாகனத்தில் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை கடத்திச் சென்றனர். பின்னர் வந்துபார்த்தபோது குழந்தை காணததைக் கண்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி அக்கம்பக்கம் தேடிப் பார்த்துள்ளார்.
பின்னர் வீடு வந்த குழந்தையின் பெற்றோரிடம் நடந்த விஷயத்தை மூதாட்டி கூறியுள்ளார். பதறிப்போன அவர்கள் இதுகுறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.