‘பிராங்க் ஷோ என நம்ப மறுத்த இளம்பெண்’... 'இன்ப அதிர்ச்சி கொடுத்த தம்பதி'... 'கலங்க வைத்த சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Nov 29, 2019 06:53 PM

உணவு விடுதியில் வேலைப் பார்த்து வந்த இளம்பெண்ணுக்கு, அங்கே சாப்பிட வந்த தம்பதி, புதிய கார் ஒன்றை பரிசளித்த நெகிழ்ச்சி  சம்பவம் நடைப்பெற்றுள்ளது.

young woman surprised and gets gift of car from couple

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் கால்வஸ்டன் நகரில் டென்னிஸ் என்ற பிரபல உணவு விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிந்து வருபவர் ஆன்ட்ரியனா எட்வர்ட்ஸ் (Adrianna Edwards) என்ற இளம் பெண். பொருளாதார சூழல் காரணமாக, தினமும் 22 கி.மீ. நடந்தே பணிக்கு வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார். கார் வாங்க வேண்டும் என்ற உந்துதலுடன் பணியாற்றி வந்த எட்வர்ட்ஸ், இதற்காக பணத்தை சிறுக சிறுக சேமித்தும் வந்திருக்கிறார்.

எப்போதும் போல் கடந்த செவ்வாயன்றும், இவர் பணிக்கு வந்தபோது, திரும்பி போகும்போது காருடன் போவோம் என்று நினைத்திருக்கவில்லை. இந்த உணவு விடுதிக்கு வந்த தம்பதிகள் இருவருக்கு, காலை உணவு வழங்கியிருக்கிறார் எட்வர்ட்ஸ். இவரது பணிவான செயலை பார்த்த அந்த தம்பதிக்கு, இவர் 22 கிலோ மீட்டர் தூரம், சுமார் 5 மணிநேரம் நடந்தே வேலைக்கு சென்று வருவது தெரியவந்தது. கடைசியாக இந்த தம்பதிக்கு ஐஸ்கிரீம் ஒன்றையும் வழங்கியுள்ளார் எட்வர்ட்ஸ்.

இதையடுத்து உணவு அருந்திவிட்டு வெளியே சென்ற அந்த தம்பதி, சிறிது நேரத்தில், கார் ஷோருமில் இருந்து 2011 மாடலான நிசான் சென்ட்ரா என்ற புதிய காரை வாங்கி வந்து, எட்வர்ட்ஸ்-க்கு கடை முன்பாக பரிசளித்துள்ளனர். முதலில் இதை துளியும் நம்பாமல் இது ஏதோ ஏமாற்று நிகழ்ச்சிக்காக (Prank Show) நடைபெறும் வேலை என்றே நினைத்துள்ளார். ஆனால் உண்மையிலேயே அது அவருக்கு பரிசாக கிடைத்தது என்ற தெரிந்தவுடன் நெகிழ்ச்சியில் அழுது விட்டார். இதற்கு தொகை தரவேண்டுமே என்று கவலைப்பட்டார் எட்வர்ட்ஸ்.

தங்களுக்கு எதுவும் தரவேண்டாம், கிறிஸ்மஸ் பரிசாக வைத்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு, அதற்கு பதில் ஏழை மக்களுக்கு ஏதாவது உதவி செய்தால் போதும் என்று எட்வர்ட்ஸ்-க்கு பதில் அளித்துள்ளனர் அந்த தம்பதி. இதனால் எட்வர்ட்ஸ்  மிகவும் நெகிழ்ந்து போயுள்ளார். இந்த காரின் மூலம் 5 மணி நேர நடைப்பயணம், தற்போது அரை மணிநேரமாக மாறியுள்ளது எட்வர்ட்ஸ்-க்கு. கார் கிடைத்த மகிழ்ச்சியில் உள்ள எட்வர்ட்ஸ், இன்னும் கனவு காண்பதுபோல் உள்ளதாக கூறியதுடன், 2 மணிநேரத்திற்கு ஒருமுறை, ஜன்னல் மூலம் தனது கார் உள்ளதா என பார்த்து பரவசமடைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

Tags : #AMERICA #YOUNG #WOMAN