கர்ப்பமா இருந்தது தெரியாமலேயே விமான பயணம்.. நடுவானில் வந்த பிரசவ வலி.. பதறிப்போன பணியாளர்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்கர்ப்பமாக இருந்தது தெரியாமலேயே விமான பயணத்தில் ஈடுபட்ட பெண் ஒருவருக்கு விமானத்திலேயே பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது.

Also Read | 400 கிமீ தூரம்.. மனைவியின் உடலை சூட்கேசில் கொண்டு போன மருத்துவர்.. பின்னர் தெரிய வந்த அதிர்ச்சி!!
ராயல் டச்சு ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று ஈக்குவடார் நாட்டில் இருந்து ஸ்பெயின் நோக்கி பயணித்து கொண்டிருந்தது. அப்போது, விமான பயணிகளில் ஒருவரான தாமராவிற்கு வயிறு வலி ஏற்பட்டிருக்கிறது. இதனால் விமானத்தில் இருந்த கழிவறைக்கு அவர் சென்றிருக்கிறார். இதனையடுத்து, சிறிது நேரத்தில் அவர் சத்தமிடவே விமான பணிப்பெண்கள் அச்சமடைந்திருக்கின்றனர். உடனடியாக கழிவறைக்கு சென்ற பணிப்பெண்கள் தாமரா பிரசவ வலியால் துடிப்பதை அறிந்திருக்கின்றனர்.
அப்போது விமானத்தில் யாரேனும் மருத்துவர்கள் இருக்கிறார்களா? என பணிப்பெண்கள் கேட்டிருக்கின்றனர். அதிர்ஷ்டவசமாக அந்த விமானத்தில் ஆஸ்திரியாவை சேர்ந்த இரண்டு மருத்துவர்கள் இருந்திருக்கிறார்கள். இதனால் விமானத்திலேயே தாமராவுக்கு பிரசவம் நடைபெற்றிருக்கிறது. பிரசவம் நன்றாக நடந்த நிலையில் தாய் மற்றும் சேயை மருத்துவர்கள் காப்பாற்றியிருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து, ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கியிருக்கிறது. அப்போது விமான நிலைய அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல்கள் அளிக்கப்பட்டதால் தாய் மற்றும் சேயை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஒன்று தயார் நிலையில் இருந்திருக்கிறது. அதன் மூலமாக தாமரா மற்றும் அவரது குழந்தை அருகில் உள்ள மருத்துவனைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கின்றனர்.
இதுகுறித்து பேசிய மருத்துவமனை செய்தித் தொடர்பாளர்,"ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு தாமராவிற்கு வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. இதனால் விமானத்தில் இருந்த கழிவறைக்கு சென்றிருக்கிறார். அப்போதுதான் அது பிரசவ வலி என்பது அவருக்கு தெரியவந்திருக்கிறது. தான் கர்ப்பமாக இருந்ததே அவருக்கு தெரிந்திருக்கவில்லை. நல்வாய்ப்பாக அந்த விமானத்தில் இருந்த இரு மருத்துவர்கள் தாய் மற்றும் சேயை காப்பாற்றி இருக்கின்றனர். அதன்பிறகு தாமரா மற்றும் அவரது குழந்தை அனுமதிக்கப்பட்டனர். தற்போது இருவரும் நலமாக இருக்கின்றனர்" என்றார்.
தாமரா தனது குழந்தைக்கு மாக்சிமிலியானோ என்று பெயரிட்டிருக்கிறார். விமான பயணத்தில் தனக்கு வலி ஏற்பட்ட சமயத்தில் உதவிகரமாக இருந்த சக பயணியின் நினைவாக அந்த பெயரை வைத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார் அவர்.
Also Read | "இது 'ஆ' தான்.."... டீச்சரிடம் மழலை மொழியில் வாதம் செய்த கியூட் சிறுவன் .. இணையத்தை கலக்கும் வீடியோ..!

மற்ற செய்திகள்
