காணாமல் போன 80 வயது மூதாட்டி.. இளம்பெண் வீட்டின் அலமாரியில் இருந்த உடல்.. கொலைக்கான காரணம் தெரிஞ்சு பீதியில் உறைந்த குடும்பம்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூர் பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த 80 வயது மூதாட்டி ஒருவர் காணாமல் போன நிலையில், அதன் பின்னர் தெரிய வந்த உண்மை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

80 வயதாகும் பர்வதம்மா என்ற பெண்மணி, தனது மகன் ரமேஷ் மற்றும் மருமகள் ஜோதி ஆகியோருடன் பெங்களூர் அருகே ஆனேக்கல் என்னும் அபார்ட்மெண்ட்டின் இரண்டாவது மாடியில் தங்கி வந்துள்ளார்.
அப்படி ஒரு சூழலில், ரமேஷ் வேலைக்கு சென்றிருந்த நிலையில், வெற்றிலை வாங்கி வருவதாக கூறி வீட்டில் இருந்தும் பர்வதம்மா கிளம்பியதாக சொல்லப்படுகிறது.
ஆனால், அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால், மகன் ரமேஷ், மருமகள் ஜோதி உள்ளிட்டோர் பர்வதம்மாவை பல இடங்களில் தேடியும் வந்துள்ளனர். அவர் எங்கேயும் கிடைக்கவில்லை. அப்படி ஒரு சூழலில், பர்வதம்மா காணாமல் போன அன்று அதே அபார்ட்மெண்ட்டில் இருக்கும் பாவல் கான் என்ற பெண் அவரை வீட்டிற்கு அழைத்திருந்ததாக ஜோதி தனது கணவர் ரமேஷிடம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ரமேஷ் வீட்டிற்கு பாவல் கான் அடிக்கடி வந்ததால் அவர் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது. ஒரு சில தினங்கள் கழித்து பாவல் கான் மீது சந்தேகம் வர அவர் வீட்டிற்கு சென்று ரமேஷ் பார்த்துள்ளார். ஆனால், அவரது வீடு பூட்டப்பட்டு கிடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
தாய் பர்வதம்மா காணாமல் போனது தொடர்பாக போலீஸ் நிலையத்திலும் ரமேஷ் புகார் ஒன்றை அளித்துள்ளார். ஒரு சில நாள் கழித்து மீண்டும் பாவல் கான் வீட்டை போய் பார்த்த போது அவரது வீடு பூட்டப்பட்டு தான் கிடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடம் வந்த போலீசார் பாவல் கானின் வீட்டிற்கு சென்று சோதனை செய்த போது அங்கிருந்த அனைவரையும் உறைய வைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
அங்கிருந்த அலமாரி ஒன்றிற்குள் பர்வதம்மாவின் உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அலமாரிக்கு அருகே செல்ல முடியாத படி கட்டில் ஒன்றும் குறுக்கே போடப்பட்டுள்ளது.
அது மட்டுமில்லாமல், பர்வதம்மா போட்டிருந்த சுமார் 3.5 லட்ச ரூபாய் மதிப்பிலான 80 கிராம் தங்க நகைகளும் காணவில்லை என்றும் ரமேஷ் தெரிவித்துள்ளார். பர்வதம்மா காணாமல் போன நாளில் இருந்தே பாவல் கானும் வீட்டில் இல்லை என தகவல் தெரிவிக்கும் நிலையில், அவரது வீட்டில் பர்வதம்மா உடலும் கிடந்துள்ளது. நகைக்காக மூதாட்டி பர்வதம்மாவை அழைத்து அவரை கொலை செய்து அடைத்து விட்டு அங்கிருந்து இளம்பெண் பாவல் கான் தப்பி இருக்கலாம் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாவல் கான் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் என தகவல் தெரிவிக்கும் நிலையில், அவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
