கண்களுக்கு 'டை' அடிக்க முற்பட்ட பெண், பார்வையை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலந்து நாட்டைச் சேர்ந்த அலெக்சாண்ட்ரா சடோவ்ஸ்கா என்ற 25 வயது பெண், பொபெக் என்ற ராப் கலைஞரின் தீவிர ரசிகை ஆவார். அவரைப் போலவே தன்னுடைய கண்களின் வெள்ளைப் பகுதிக்கு 'டை' அடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, அவர் நாட்டில் உள்ள பச்சை குத்தும் நபர் ஒருவரை அணுகி, தன்னுடைய கண்களுக்கு 'டை' அடித்துள்ளார்.
அப்போது, தனக்கு வலி ஏற்படுவதாக அலெக்சாண்ட்ரா பச்சை குத்துபவரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த வலி இயல்பானது தான் என்றும், வலி நிவாரணிகள் பயன்படுத்தினால் அது சரியாகி விடும் என்றும் தெரிவித்துள்ளார். நாளடைவில், அலெக்சாண்ட்ராவின் நிலைமை ஒரு கட்டத்துக்கு மேல் மோசமானதால், தன்னுடைய ஒரு கண் பார்வையை இழந்தார்.
இந்நிலையில், அவருடைய மற்றொரு கண்ணின் பார்வையும் பறிபோகும் தருவாயில் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதன் விளைவாக, அலெக்சாண்ட்ராவிற்கு பச்சை குத்தியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், குற்றவாளிக்கு கண்களில் பச்சைக் குத்தும் அளவிற்கு, போதிய பாண்டித்தியம் இல்லாததால் தான் பார்வை இழப்பு ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
