நடுவானில் 'கொரோனா வைரஸ்' இருப்பதாக கூறிய வாலிபர்... விமானத்தை 'அவசரமாகத்' தரையிறக்கி... தலையில் தட்டி 'இழுத்துச்சென்ற' போலீஸ்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Feb 06, 2020 12:51 AM

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது தனக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கூறிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Passenger lies about having coronavirus, police investigate

கனடாவின் டொரான்டோ நகரில் இருந்து, ஜமைக்கா நாட்டின் மோண்டேகே பே நகருக்கு 243 பயணிகளுடன்  விமானமொன்று புறப்பட்டு சென்றது. விமானம் பாதி தூரத்தை கடந்து, நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது 29 வயதான வாலிபர் ஒருவர் திடீரென இருக்கையில் இருந்து எழுந்து நின்றார். அவர் தனக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கூறினார்.

இதனால் சக பயணிகள் அதிர்ந்து போக, விமான ஊழியர்கள் அவருக்கு முக கவசம் மற்றும் கையுறைகள் வழங்கி விமானத்தின் பின்புறம் சென்று அமருமாறு கூறினர். இதனையடுத்து விமானம் மீண்டும் டொரான்டோ நகருக்கே திரும்பி சென்றது. அங்கு விமானத்தை தரையிறக்கிய பின்னர் அவரை மட்டும் விமானத்தில் அமரவைத்து விட்டு மற்ற அனைவரும் அவசரமாக வெளியேறினர்.

தொடர்ந்து அவரை பரிசோதனை செய்வதற்காக மருத்துவர்கள் குழு விமானத்தின் உள்ளே சென்றது. அப்போது அந்த பயணி தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் , பயணிகளிடம் குறும்பு செய்வதற்காகவே அவ்வாறு தெரிவித்ததாகவும் கூறினார். அதிர்ந்து போன ஊழியர்கள், மருத்துவ குழுவினர் அவரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரை கைது செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.