இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டைமான் மாரடைப்பு காரணமாக சிறிது நேரத்திற்கு முன்பு கொழும்புவிலுள்ள மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
முன்னதாக அவர் வீட்டில் இருந்த போது மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இவருக்கு வயது 55.
1994ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். அதன் பின்னர் நடைபெற்ற அனைத்து நாடாளுமன்ற தேர்தல்களிலும் நுவரெலியாவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆறுமுகம் தொண்டைமான் கிட்டத்தட்ட 25 ஆணுடுகளுக்கு மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். அதே போல 15 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார் ஆறுமுகம் தொண்டைமான்.
தொண்டைமான் உயிரிழந்த செய்தியை அறிந்ததும் இலங்கை மலையக மக்கள் மட்டுமன்றி இந்திய வம்சாவளி மக்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். ஆறுமுகம் தொண்டைமானின் உடலுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச, அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் மருத்துவமனைக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தொண்டமானின் உடல் அவரது சொந்த ஊரான நுவரெலியாவிற்கு கொண்டு செல்லப்பட்டு பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. இலங்கை மலையக மக்கள் மட்டுமன்றி இந்திய வம்சாவளி மக்களின் அரசியல் தலைவராக கருதப்பட்டு வந்தவர் ஆறுமுகம் தொண்டைமான்.
வரும் 29ம் தேதி நுவரெலியா - நோர்வூட் மைதானத்தில் , ஆறுமுகன் தொண்டமானின் உடல் தகனம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை அமைச்சரின் மறைவிற்கு திமுக கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மதிமுக செயலாளர் வைகோ ஆகியோர் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.