'எங்க நாட்டில் வந்து விளையாடுங்க’.... ‘ஐ.பி.எல். 2020 போட்டியை நடத்த’... ‘விருப்பம் தெரிவித்த பக்கத்து நாடு’... 'பிசிசிஐ உயர் அதிகாரியின் பதில்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Apr 17, 2020 03:36 PM

கொரேனா வைரஸ் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐ.பி.எல் தொடரை தங்கள் நாட்டில் நடத்த இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளது.

Sri Lanka Offers to Host IPL 2020 Amid Covid19 Crisis

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே-3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதால், 13-வது சீசனுக்கான ஐ.பி.எல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஷம்மி சில்வா ஒரு பேட்டியில் கூறியதாவது, ‘ஐபிஎல் போட்டியை ரத்து செய்வதால் பிசிசிஐக்கும் அதன் அணிகளுக்கும் 500 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்படும். இன்னொரு நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்துவதன் மூலம் இந்த நஷ்டத்தை ஓரளவு குறைக்க முடியும்.

இலங்கையில் ஐபிஎல் போட்டி நடந்தால் இந்திய ரசிகர்களுக்குத் தொலைக்காட்சி வழியாக நேரலையாகக் காண்பது எளிதாக அமையும். இதற்கு முன்பு ஐபிஎல் போட்டியை தென் ஆப்பிரிக்காவில் நடத்தியுள்ளார்கள். எனவே எங்கள் கோரிக்கையை பிசிசிஐ பரிசீலிக்கும் என நம்புகிறோம். இதற்கு பிசிசிஐ ஒப்புக்கொண்டால் அவர்களுக்குத் தேவையான மருத்துவப் பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருவோம். எங்களுக்கும் ஓரளவு வருமானம் கிடைக்கும். இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இதுகுறித்து கடிதம் எழுத இருக்கிறோம்’’ என்றார்.

ஆனால் இதுகுறித்து பிசிசிஐ-யின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இலங்கையில் இருந்து எங்களுக்கு இன்னும் அப்படி ஒரு கடிதம் வரவில்லை. உலகம் முழுவதும் இயல்புநிலை திரும்பும் வரை இதைப்பற்றி பேசுவதற்கு சாத்தியமில்லை’ என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு, 2009-ல் தென் ஆப்பிரிக்காவில் ஐபிஎல் போட்டி நடைபெற்றுள்ளது. 2014-ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் இரு வாரங்களுக்கு மட்டும் ஐபிஎல் நடைபெற்று மீதமுள்ள ஆட்டங்கள் அனைத்தும் இந்தியாவில் நடைபெற்றுள்ளன. கொரோனா பாதிப்பால் இலங்கையில் இதுவரை 230 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்கள். 7 பேர் உயிரிழந்துள்ளார்கள்.