லண்டன் சென்று திரும்பிய நிலையில்... கொரோனா அச்சுறுத்தலால்... தனிமைப்படுத்திக் கொண்ட இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்கக்கரா!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சங்கக்கரா வெளிநாடு சென்று வந்ததால் தன்னை தானே சுய தனிமை செய்து கொண்டுள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா உலகம் முழுவதும் 195 நாடுகளுக்கு பரவியுள்ளது. அந்த வகையில், இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இரண்டு வாரங்களில் 20 ஆயிரமாக அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும், உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் ஆபத்து என்றும் மருத்துவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான 86 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், லண்டன் சென்றுவிட்டு திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சங்கக்கரா அளித்த பேட்டியில், ‘எனக்கு எந்தவித நோய் அறிகுறியும் இல்லை. ஆனாலும் அரசு அறிவுறுத்தலின்படி என்னை நானே தனிமைப்படுத்தி கொண்டு இருக்கிறேன். லண்டனில் இருந்து இலங்கை வந்து ஒரு வாரத்திற்கு மேலாகிறது. மார்ச் 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரையில் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் போலீசில் பதிவு செய்து தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி நானே முன்வந்து போலீசில் பதிவு செய்து கொண்டு தனிமையை அனுபவித்து வருகிறேன். சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த 3 பேர் மருத்துவ பரிசோதனையில் இருந்து தப்பிக்க முயன்றதையும் அறிவேன்’ என்று தெரிவித்துள்ளார்.
