‘முழுசா எதுவும் தெரியாம’... ‘பொறுப்பு இல்லாமல் பேசக் கூடாது’... CAA குறித்து... விராட் கோலியின் அதிரடி பதில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Jan 04, 2020 07:48 PM
குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகிய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்கள் முதலில் அசாம் மாநிலத்தில்தான் தொடங்கியது.
ஏனெனில், அஸ்ஸாமில் கடந்த 1971-ம் ஆண்டு, மார்ச் 24-ம் தேதிக்குப் பிறகு சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டறியும் நோக்கில், தேசிய குடிமக்கள் பதிவேட்டைப் புதுப்பிக்கும் பணி (NRC) கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கியது. இதன் இறுதிப் பட்டியல் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதில், 19 லட்சம் பேர் விடுபட்டிருந்தனர். இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், இதையடுத்து அமல்படுத்தப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, அஸ்ஸாம் மாநிலத்தின் பல்வேறுப் பகுதிகளிலும் மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி அஸ்ஸாமில் உள்ள கவுகாத்தியில் நாளை நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியில் கேப்டன் விராட் கோலியிடம் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது, ‘குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து முழு தெளிவு இல்லாமல் கருத்து தெரிவிப்பது தவறு. இந்த விவகாரத்தில் நான் பொறுப்பற்றவனாக இருக்க விரும்பவில்லை. இதுகுறித்து இருவேறு கருத்துகள் உள்ள நிலையில், பொறுப்பற்ற முறையில் பதில் கூற முடியாது.
CAA தொடர்பாக பேச வேண்டுமென்றால் முழு தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும். அதன் அர்த்தம் என்ன, என்ன நடக்கிறது என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். இதன்பின் தான் இதுகுறித்து கருத்து தெரிவிக்க வேண்டும்’ என்றார். போராட்டத்தை ஒட்டி கவுகாத்தியில் டி20 ஆட்டத்தைப் பார்க்க வரும் ரசிகர்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கைக்குட்டை, துண்டு ஆகியவற்றைக் கூட ரசிகர்கள் கொண்டுவரக்கூடாது என்று கட்டளையிடப்பட்டுள்ளது.