'10 நிமிடத்திற்கு ஒருவர் மரணம்...' ஒரு மணி நேரத்தில் '50 பேர்' பாதிப்பு... 'பொருளாதாரத் தடை'யால் மருத்துவ 'உபகரணங்கள்' இன்றி தவிக்கும் 'ஈரான்'...
முகப்பு > செய்திகள் > உலகம்தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடையால், சரியான மருத்துவ உபகரணங்கள் இன்றி கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 10 நிமிடத்திற்கு ஒருவர் உயிரிழப்பதாக ஈரான் சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கிட்டத்தட்ட 170 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளது.
சீனாவில் தற்போது கொரோனா வைரஸின் தொற்று முழுமையாக கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டாலும், இத்தாலி மற்றும் ஈரானில் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் 3600-க்கும் அதிகமானோரும், ஈரானில் 1300-க்கும் அதிகமானோரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளதால் கடும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் திணறி வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாஸ்க், சானிடைசர் போன்றவற்றை போதுமான அளவுக்கு தயாரிக்கக் கூட முடியாமல் அந்நாடு தவித்து வருகிறது. இதனால் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு உதவ முன்வர வேண்டுமென்று ஈரான் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஈரான் சுகாதாரத்துறை செய்தி தொடர்பாளர் தனது ட்விட்டர் பக்கதில் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 10 நிமிடங்களுக்கு ஒருவர் உயிரிழக்கின்றனர். ஒரு மணி நேரத்திற்கு 50 பேர் பாதிக்கப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் பயணங்கள் மற்றும் விழாக்களை தவிர்க்க வேண்டும்“ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
