"வடகொரியாவில் கொரோனா பாதிப்பு இல்லை...." "என்னை மீறி ஒரு வைரஸ் கூட உள்ள வர முடியாது..." 'கிம் ஜாங் உன்'னின் வேற லெவல் 'கன்ட்ரோல்'...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளே கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் திணறி வரும் நிலையில், தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட வைரஸ் தொற்று இல்லை என வடகொரியா கூறியுள்ளது.
தென்கொரியாவைவிட அதிக பரப்பளவை கொண்ட வடகொரியாவில் மக்கள் தொகை மிகக் குறைவு. பொதுவாகவே வெளி உலகுடன் எந்தவிதமான தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் தனிமையிலேயே இருந்துவரும் வடகொரியாவிற்கு பயணம் செய்யக்கூடிய வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையும் வெகு சொற்பமே.
இந்த நிலையில், வெளியுலகுடனான தொடர்பை துண்டித்ததால் தங்கள் நாடு வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கப்பட்டதாகவும் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என்றும் வடகொரியா கூறியுள்ளது. அதற்கு காரணம் தங்கள் நாட்டு எல்லைகளை ஜனவரியில் இருந்தே முழுமையாக அடைத்து விட்டதாகவும், அண்டை நாடுகளுடனான ரயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளை முற்றிலும் தடை செய்துவிட்டதாகவும் வடகொரியா சொல்கிறது.
நாட்டின் அதிபர் கிம்ஜாங் உன் நாட்டில் ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் தொலைத்து கட்டிவிடுவேன் எனக் கூறியதால் அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.
சீனா சென்று வந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வடகொரிய அரசு தனிமைப்படுத்தியதாகவும், மீறி பொது இடத்துக்கு சென்ற ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கடந்த பிப்ரவரியில் தகவல்கள் வந்தன. வடகொரிய அரசு இதுவரை கொரோனா பரவல் குறித்து பேசவில்லை. இதனால் உண்மை நிலை என்னவென்று இதுவரை உலக மக்களுக்குத் தெரியவில்லை.
கொரோனா வைரஸின் பூர்வீகமான சீனாவும், வைரஸ் தொற்று அதிகம் ஏற்பட்ட நாடுகளில் ஒன்றான தென்கொரியாவும் வடகொரியாவுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. அப்படி இருக்கையில் எப்படி இங்கு வைரஸ் பரவாமல் இருக்க முடியும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கேள்வி எழுப்புகின்றன.
வடகொரியாவில் கட்டாயம் இந்த வைரஸால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அந்நாட்டிற்கான அமெரிக்காவின் ராணுவ கமாண்டர் ஜெனரல் ராபர்ட் அப்ரம்ஸ் தெரிவித்துள்ளார்.