'கொரோனா' பாதிப்பால்... 'இரண்டரை கோடி' மக்கள் 'வேலையிழக்க' வாய்ப்பு... 'எச்சரிக்கை' விடுக்கும் 'ஐ.நா'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் சுமார் இரண்டரை கோடி மக்கள் வேலை இழக்க நேரிடும் என ஐ.நா. தகவல் வெளியிட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 165 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தொற்றினால் சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பீதியால் பெரும்பாலான நாடுகளின் விமான சேவைகள் நிறுத்தப்பட்டு விட்டன. மேலும் ரயில், பேருந்து, டாக்சி உள்ளிட்ட சேவைகளும் வெகுவாக குறைக்கப்பட்டு விட்டன. இதனால் போக்குவரத்து நெருக்கம் மிகுந்த நகரங்கள் கூட வெறிச்சோடி காணப்படுகின்றன.
மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், மது விடுதிகள், கேளிக்கை அரங்கங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. இதனால் பெருமளவில் தொழில்முடக்கம் ஏற்பட்டு சராசரியான பணப்பறிமாற்றம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வருமானம் சுருங்கிப் போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் சுமார் இரண்டரை கோடி மக்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும், இதன் எதிரொலியாக 3 கோடியே 40 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வருமான இழப்பு ஏற்படும் என்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான தொழிலாளர் நல அமைப்பு வெளியிட்ட மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து உருவாக்கும் கொள்கை முடிவின் மூலம் இந்த மதிப்பீட்டு எண்ணிக்கை வெகுவாக குறைய வாப்பிருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
