'கொரோனா' தாக்கம் தமிழகத்தில் 'எங்கெல்லாம்' உள்ளது?... 'சந்தேகங்களை' 'யாரிடம்' கேட்க வேண்டும்... 'சுகாதாரத்துறை' என்ன ஏற்பாடுகளை செய்துள்ளது?... 'விவரங்கள் உள்ளே...'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Mar 17, 2020 01:32 PM

தமிழகத்தில் சென்னை பூந்தமல்லி, ஈரோடு, கோவை, நாகை, பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா அறிகுறிகளுடன் பலர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா குறித்த சந்தேகங்களை கேட்க இலவச தொடர்பு எண்களையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

many people in tamilnadu getting treatment for corona symptoms

கொரோனா அறிகுறிகளுடன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், அருங்காட்சியகங்கள், உயிரியல் பூங்காக்கள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் பார்கள் உள்ளிட்டவை மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், துபாயிலிருந்து சென்னைக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த 14 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் அவர்கள் பூந்தமல்லி சிறப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் டென்மார்க், இத்தாலி, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பியுள்ளனர்.

ஈரோட்டுக்கு சுற்றுலா வந்த தாய்லாந்தைச் சேர்ந்த 6 பேரில் ஐந்து பேர் கொரோனா அறிகுறிகளுடன் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றொருவர் கோவையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

கேரளாவுக்கு வேலைக்குச் சென்று திரும்பிய ஈரோட்டைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்த நிலையில் அவர் கொரோனா அறிகுறிகளுடன் பெருந்துறையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அதேபோல் கேரளாவில் உள்ள கோழிக்கோடில் பணியாற்றிய விருதுநகர் மாவட்டம் மம்சா புரத்தைச் சேர்ந்த பேராசிரியை கொரோனா அறிகுறிகளுடன் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேபோல், சவுதி அரேபியாவிலிருந்து நாகை மாவட்டம் துளசியாபட்டினம் வந்த ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்நிலையில், தமிழ்நாட்டில்  செயல்பட்டு வந்த 330 கொரோனா தனி வார்டுகளை தற்போது ஆயிரத்து 120 வார்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை பெற இலவச தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 044 - 29510400; 044-29510500; 94443 40496; 87544 48477 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Tags : #CORONA #TAMILNAD #TREATMENT #VIJAYABASKAR #SYMTOMS