"எது... கொரோனா பள்ளமா?..." "ஒரு வைரஸ்ன்னு கூட பாக்காமா..." "பேரு வச்சு விளையாடுறீங்களே..." "மனசாட்சி இல்லையா உங்களுக்கு..."
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் சாலை ஓரத்தில் ஏற்பட்டுள்ள பெரும் பள்ளத்தை சீரமைக்க வலியுறுத்தி "கொரோனா பள்ளம் உள்ளது கவனமாக செல்லுங்கள்" என பெயர் பலகை வைத்துள்ள செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செக்காலை ரோடு பகுதி, ஜாகிர்உசேன் தெரு சாலை, அருணாச்சலம் செட்டியார் தெரு சாலை உள்ளிட்ட 5 சாலைகளின் சந்திக்கும் பகுதியாக அமைந்துள்ளது. இதனால் இப்பகுதி எப்பொழுதும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதியாகவே காணப்படும்.
இந்த பகுதியில் உள்ள அருணாச்சலம் செட்டியார் தெரு சாலை தொடக்கத்தில் கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து பல மாதங்களாக கழிவு நீர் வெளியேறி வருவதால் பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலையோரமாக ஏற்பட்டுள்ள இந்த பள்ளத்தில் அவ்வழியாக செல்வோர் அடிக்கடி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இதனால் பலர் காயமடைந்துள்ளனர். அதனால் பள்ளத்தை சீரமைக்க வலியுறுத்தி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தப்பட்டும் நடிவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து அந்த பள்ளத்தில் நூதன முறையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் விளம்பர பலகை ஒன்றை வைத்துள்ளனர். காரைக்குடி நகராட்சியின் அலட்சிய போக்கால் இங்கு அபாயகரமான ‘கொரோனா பள்ளம்’ உள்ளது. எனவே வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கவனமாக செல்ல வேண்டும் என்ற வாசகத்தை எழுதியுள்ளனர். மேலும் அந்த குழியை பழைய பொருட்களை கொண்டு மூடியுள்ளனர்.
காரைக்குடி நகராட்சியின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியாக இந்த விளம்பரப் பலகையை இப்பகுதியில் வைத்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.