‘100 பயணிகளுடன்’ கிளம்பிய விமானம்... புறப்பட்ட சில நிமிடங்களில் ‘திடீரென’ நடந்த கோர விபத்து... ‘பதறவைக்கும்’ சம்பவம்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Dec 27, 2019 11:05 AM

கஜகஸ்தானில் விமானம் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டிடம் ஒன்றின்மீது மோதி விபத்துள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

Accident Plane With 100 On Board Crashes In Kazakhstan 14 Dead

கஜகஸ்தானின் அல்மாட்டி (Almaty) நகரில் இருந்து தலைநகர் நூர்சுல்தானிற்கு (Nursultan) இன்று காலை 7 மணியளவில் பெக் ஏர் (Bek Air) நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் 95 பயணிகளும், 5 விமான ஊழியர்களும் இருந்துள்ளனர். விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்த விமானம் புறநகரில் உள்ள 2 மாடிக் கட்டிடத்தின்மீது மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த கோர விபத்தில் விமானத்தின் பெரும்பாலான பாகங்கள் நொறுங்கியுள்ளன.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப்படையினர் மற்றும் போலீசார் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வெளியாகியுள்ள முதல் கட்டத் தகவலில், இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது. விமானம் விழுந்து விபத்துக்குள்ளான பகுதி மக்கள் வசிக்கும் பகுதி என்பதால், அங்கிருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்தில் கட்டிடத்திற்குள் இருந்தவர்களும் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதையடுத்து அல்மாட்டி விமான நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களின் சேவையும், பெக் ஏர் நிறுவனத்தின் விமான சேவையும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள சிறப்புக்குழு ஒன்றை கஜகஸ்தான் அரசு அமைத்துள்ளது. அந்நாட்டு அதிபர் குவாசிம் ஜோமர்ட் தொக்கேவ் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags : #ACCIDENT #KAZAKHSTAN #PLANE #CRASH