முந்தி செல்ல முயன்ற போது... சரக்கு ஆட்டோவும், டேங்கர் லாரியும் மோதி... 4 பேருக்கு நடந்த பரிதாபம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Dec 20, 2019 01:11 PM
செங்கல்பட்டு அருகே டேங்கர் லாரியும், சரக்கு ஆட்டோவும் மோதிக் கொண்டதில், 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு அருகே, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பரனூரில் சரக்கு ஆட்டோ ஒன்று சென்னையில் இருந்து திண்டிவனத்திற்கு சென்றுக் கொண்டிருந்தது. இதேபோல், சென்னையிலிருந்து எல்.பி.ஜி. காஸ் நிரப்பிய டேங்கர் லாரி ஒன்று, சிவகங்கை மாவட்டம் இளையான்குடிக்கு போய் கொண்டிருந்தது. டேங்கர் லாரி சாலையின் இடது புறமும், அதற்கு இணையாக வலது புறம் சரக்கு ஆட்டோவும் சென்றன. லாரியை ஆட்டோ முந்த முயற்சித்தபோது, நிலைத் தடுமாறிய லாரி, எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதியது.
பின் மைய தடுப்பை கடந்து ஆட்டோவும், லாரியும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், ஆட்டோவில் சிக்கிய ஓட்டுநர் சந்தோஷ் (22), ராஜேஷ் (25), முன்னா (24) மற்றும் லாரி ஓட்டுநர் சிலம்பரசன் ஆகியோரை மீட்டு, செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அவர்களுக்கு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.