விபத்தால் ‘மோதிக்கொண்ட’ ஓட்டுநர்கள்... ‘சமாதானம்’ செய்யச் சென்ற காவலருக்கு... அடுத்த ‘நொடி’ காத்திருந்த பயங்கரம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Dec 26, 2019 11:56 AM

பேருந்து - டெம்போ விபத்தால் மோதிக்கொண்ட ஓட்டுநர்களை சமாதானம் செய்யச் சென்ற காவலர் மற்றொரு விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Kanyakumari CRPF Officer Died In Bus Tempo Accident In Kerala

கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு பகுதியைச் சேர்ந்த அருளப்பன் (49) என்பவர் கேரள மாநிலம் கண்ணூர் சி.ஆர்.பி.எஃப் பயிற்சி முகாமில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக அவர் விடுமுறை எடுத்து பேருந்தில் ஊர் திரும்பியுள்ளார். அந்தப் பேருந்து புதிய காவு பகுதியில் பயணித்தபோது வைக்கோல் ஏற்றி வந்த டெம்போ ஒன்றுடன் லேசாக மோதியுள்ளது. இதைத்தொடர்ந்து பேருந்து ஓட்டுநரும், டெம்போ ஓட்டுநரும் வாகனங்களை நிறுத்திவிட்டு கீழே இறங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் பிரச்சனை பெரிதாக பேருந்தில் இருந்த பயணிகளும் கீழே இறங்கி வந்து வேடிக்கை பார்த்துள்ளனர். அப்போது பேருந்தில் இருந்து இறங்கி வந்த அருளப்பன் இரு தரப்பினரிடமும் பேசி சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார்.

அந்த நேரத்தில் காய்கறி ஏற்றி வந்த டெம்போ ஒன்று திடீரென நின்றுகொண்டிருந்த வைக்கோல் டெம்போவின் பின் பகுதியில் வேகமாக மோதியுள்ளது. இதனால் அந்த வைக்கோல் டெம்போ முன்புறமாக நகர, அதன் முன் நின்று பேசிக்கொண்டிருந்த அருளப்பன் உள்ளிட்ட சிலர் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த அருளப்பன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இதில் காயமடைந்த மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்த அருளப்பனுக்கு விஜயராணி என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஊர் திரும்பும் வழியில், சமாதானம் பேச சென்றவர் விபத்தில் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ACCIDENT #KERALA #POLICE #CRPF #BUS #TEMPO #CHRISTMAS #KANYAKUMARI