‘செலவுக்கு பணம் இல்ல’... ‘இளைஞர்கள் செய்த காரியம்’... 'விசாரணையில் வெளியான தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 28, 2019 09:10 PM

தீபாவளி செலவுக்கு பணம் இல்லாததால், ஆளில்லாத வீட்டில் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

youth surrendered with robbery 40 sovereign gold jewels

சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள், தினகரன் - வசந்த குமாரி தம்பதி. இவர்கள் கடந்த 6 மாதத்திற்கு முன்னர், அமெரிக்காவில் உள்ள தங்களது மகளை பார்க்கச் சென்றதால், வீட்டை பூட்டிவிட்டு சென்றனர். இதனால், சின்ன நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த வள்ளி (40) என்ற பெண்ணை, மாதம் ஒருமுறை வீட்டை திறந்து சுத்தம் செய்ய வேலைக்கு அமர்த்திவிட்டு சென்று இருந்தனர். அதன்படி வள்ளி, தினகரன் வீட்டை திறந்து சுத்தம் செய்ய உள்ளே சென்றார்.

அப்போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நொளம்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மற்றும் அங்கு பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை வைத்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியதை அறிந்த அருண் (28) மற்றும் ராஜ்குமார் (23), போலீசார் தங்களை கைது செய்யக் கூடும் என்ற பயத்தில் சரணடைந்தனர்.  அவர்களிடம் நடத்திய விசாரணையில்,  தீபாவளி செலவுக்கு பணம் இல்லாததால், தினகரன் வீட்டினுள் நுழைந்து பொருட்களைத் திருட திட்டமிட்டதாகவும், சுண்ணாம்பு அடிக்க பயன்படுத்தப்படும் கயிறு மூலம், ஜன்னல் வழியாக இருவரும் உள்ளே சென்று, பீரோவில் இருந்த 40 சவரன் நகையைக் கொள்ளையடித்ததாகவும் வாக்குமூலம் அளித்தனர்.  இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : #STEALING