‘குடும்பத்துல எல்லாரும் நல்லா இருக்கணும்’.. கொலையாளியின் வாக்குமூலத்தைக் கேட்டு.. ‘அதிர்ந்துபோய் நின்ற போலீஸார்’..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Sep 11, 2019 11:01 AM
ராஜஸ்தானில் ஒருவர் கொலை செய்ய கூலிப்படை வைத்து தனது வாழ்க்கையை முடித்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த பல்பீர் கரோல் (38) என்பவர் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். தனது பகுதியில் வசிப்பவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்துவந்த இவர் கடந்த 2ஆம் தேதி சடலமாக தனது வீட்டிற்கு அருகிலுள்ள காட்டுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் பல்பீரின் செல்ஃபோன் அழைப்புகள் மற்றும் அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பார்த்த போலீஸார் சந்தேகத்தின் பேரில் ராஜ்வீர் சிங், சுனில் யாதவ் என்ற 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் வெளிவந்த கொலைக்கான காரணத்தைக் கேட்டு போலீஸார் அதிர்ந்துபோய் நின்றுள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள போலீஸார், “வட்டி தொழில் செய்துவந்த பல்பீருக்கு அதில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டதால் அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். பணத்தை இழந்த பல்பீர் தனது குடும்பத்தினர் யாரும் எதிர்காலத்தில் கஷ்டங்களை அனுபவிக்கக்கூடாது என நினைத்து ஒரு திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி கடந்த மாதம் தனியார் வங்கி ஒன்றில் தனது பெயரில் 50 லட்சம் ரூபாய்க்கு இன்ஸ்யூரன்ஸ் பாலிசி ஒன்றை எடுத்துள்ளார். தான் இறந்தால் அந்த பாலிசி பணம் தனது குடும்பத்தினருக்கு கிடைக்குமாறு அவர்களது பெயரையும் அதில் சேர்த்த அவர் அதற்கான முதல் தவணையையும் செலுத்தியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர் ராஜ்வீர் சிங் மற்றும் சுனில் யாதவ் இருவரையும் தன்னைக் கொலை செய்ய ஏற்பாடு செய்துள்ளார். பின்னர் திட்டமிட்டபடி சம்பவத்தன்று அவர்கள் இருவரும் பல்பீரின் கை, கால்களை கட்டி, கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அவருடைய பையிலிருந்த பணத்தை எடுத்துச் சென்றுள்ளார்கள்” எனக் கூறியுள்ளனர். குடும்பத்தினர் எதிர்காலத்தில் கஷ்டங்களை அனுபவிக்கக்கூடாது என்பதற்காக ஒருவர் கூலிப்படை வைத்து தனது வாழ்க்கையை முடித்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.