'திருமணமாகி ஓராண்டுதான்'... 'இளம் தம்பதி எடுத்த விபரீத முடிவு'... 'கலங்கி தவிக்கும் பெற்றோர்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 31, 2019 03:34 PM

தனிக்குடித்தனம் நடத்த அனுமதி தராததால், இளம் தம்பதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

young couple committed suicide due to family issue debt

கோவை சூலூர் அருகே பொன்னான்டம்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் ஜெய்சங்கர் மற்றும் ரஞ்சனி தம்பதி. இவர்களது மகன் கேசவராஜ் (22). தனியார் பைப் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவருக்கும், இவரது தாய்மாமன் மகளான கிருத்திகா(20) என்பவருக்கும், கடந்த ஓராண்டுக்கு முன்னதாகதான் திருமணம் நடைப்பெற்றது. திருமணம் முடிந்ததிலிருந்து, தம்பதிகள் இருவரும், வழக்கம்போல், கேசவராஜின் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் கேசவராஜ் மற்றும் கிருத்திகா ஆகிய இருவரும் தனிக்குடித்தனம் செல்ல அனுமதி கேட்டதாகத் தெரிகிறது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த கேசவராஜின் பெற்றோர், புதிதாக கட்டிய வீட்டின் கடன் முடியும் வரை கூட்டுக்குடும்பமாக வாழலாம் என மகன், மருமகளிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஏனெனில், கேசவராஜின் தந்தையான ஜெய்சங்கர், அதேப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில், காவலாளியாக வேலைப்பார்த்து வரும்நிலையில், அவரது மனைவி ரஞ்சனி கூலி வேலை செய்து வருகிறார்.

இதனால், வீட்டுக் கடனை அடைப்பதில் சிரமம் ஏற்படும் என்பதால், அது முடிந்தவுடன் செல்லுமாறு கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தனிக்குடித்தனம் போக அனுமதி கிடைக்காதநிலையில், இளம் தம்பதிகள் விரக்தி அடைந்து இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், தீபாவளியைக் கொண்டாட தாய் வீட்டிற்கு வந்த கேசவராஜின் சகோதரி காயத்ரி, கேசவராஜ் மற்றும் கிருத்திகா இருந்த அறைக்கு, கடந்த புதன்கிழமை காலை சென்று கதவை தட்டியுள்ளார்.

நீண்ட நேரமாகியும், கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவர், ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, கேசவராஜ் மற்றும் கிருத்திகா இருவரும் மின் விசிறியில் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இளம் தம்பதிகளின் முடிவால், பெற்றோர் தற்போது கலங்கி நிற்கின்றனர். இதுகுறித்து அளித்த தகவலின்பேரில், அங்கு வந்த போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #SUICIDE #HUSBANDANDWIFE #PARENTS #KOVAI