‘சாகுறதுக்குள்ள அவங்க முகத்த ஒருதடவ பாத்தாபோதும்’ ‘கைவிட்ட பிள்ளைகளை தேடி அலையும் பெற்றோர்’ கண்கலங்க வைத்த சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Oct 18, 2019 04:10 PM
கைவிட்ட பிள்ளைகளை தேடி முதியவர்கள் ஊர் ஊராக அலையும் சம்பவம் அனைவரையும் உருக வைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு பகுதியை சேர்ந்தவர்கள் கணேஷன் (70)-சரசு (65) தம்பதியினர். இவர்களுக்கு லெட்சுமி என்ற மகளும், சத்யராஜ் என்ற மகனும் உள்ளனர். குடை ரிப்பேர் செய்யும் வேலை பார்த்தும், செருப்பு தைத்தும் குழந்தைகளை கஷ்டப்பட்டு ஆளாக்கியுள்ளனர். பிள்ளைகள் இருவரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்துகொண்டு ஆளுக்கொரு திசையாக சென்றுவிட்டனர். காலம் செல்ல செல்ல பெற்றோரை சந்திக்காமலே இருந்துள்ளனர்.
இதனால் பிள்ளைகளை தேடி கணேஷனும், சரசுவும் செல்லத் தொடங்கியுள்ளனர். அவர்கள் இருக்கும் இடம் தெரியாததால் நாடோடியாக ஊர் ஊராக அலைந்து வருகின்றனர். தெருத்தெருவாக செருப்பு தைத்தும், குடை ரிப்பேர் செய்தும் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இதற்கு நடுவே பிள்ளைகளை தேடி அலையும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை கன்னியாகுமரி, நாகர்கோவில், கேரளா உள்ளிட்ட பல பகுதிகளில் தங்களது பிள்ளைகளை தேடி அலைந்துள்ளனர். ஆனால் பிள்ளைகள் குறித்த ஒரு தகவலும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
கடந்த 7 வருடங்களாக ஒவ்வொரு இடமாக தேடி அலைந்த அவர்கள் தற்போது மார்த்தாண்டம் பாலத்தின் கீழ் தஞ்சம் அடைந்துள்ளனர். கடுமையான மழையோ, வெயிலோ அந்த பாலம் தான் அவர்களை காத்துவருகிறது. பல வருடங்களாக அலைந்ததால் முன்பைபோல வேலை செய்ய முடியாமல் முடங்கி கிடக்கின்றனர். இரக்கமுள்ள யாராவது உணவு கொடுத்தால் அதனை வாங்கி சாப்பிடுகின்றனர். இல்லையென்றால் பசியோடு உயிரை கையில் பிடித்துக்கொண்டு படுத்துகிடக்கின்றனர்.
இதுகுறித்து தெரிவித்த முதியவர்கள், ‘கல்யாணம் பண்ணிட்டு போன எங்க பிள்ளைங்க எங்கள தேடி வருவாங்கணு பல வருஷமா காத்திருந்தோம். அவங்க எங்கள தேடி வராததால ஏழு வருஷமா அவங்கள தேடி அலைஞ்சிட்டு இருக்கோம். முன்ன மாதிரி இப்ப தேடி அலய ஒடம்புல தெம்பு இல்ல. நோயும் பாடாப்படுத்துது. நாங்க சாகுறதுக்குள்ள எங்க பிள்ளைங்க முகத்த ஒரு தடவ பாத்தா போதும். வேற எந்த ஆசையும் இல்லீங்க’ என கண்கள் கலங்க தெரிவித்துள்ளனர்.